free website hit counter

இலங்கை நாளை முற்றாக முடங்கலாம் - "முடியுமானால் செய்யுங்கள்.. " பிரதமர் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் அரசியற் பொருளாதாரக் குழப்பங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ள நிலையில், பிரதமர், ஜனாதிபதி, பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

ஆனால் தன்னை பதவி விலகுமாறு யார் கூறினாலும் இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை எனப் பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ திடமாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் பதவி விலகத் தயார் எனவும் , ' முடியுமானால் என்னை விலக்கிப் பாருங்கள்' எனப் பிரதமர் கூறியுள்ளதாகவும் தகவல்கனள் வெளியாகியுள்ளன.

ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளதாக அறியவருகிறது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் கூட்டப்படுகிறது. இதன் முதற்கட்டச் சந்திப்பில், முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவும், இதன் தொடர்ச்சியாகவும், இரண்டாங்கட்டமாகவும், எதிர்வரும் வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் ஜனாதிபதி தனித்தனியாக கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு, ஜனாதிபதி ஹோட்டாபய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் 29ம் திகதி கலந்துரையாஅரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி அழைத்துள்ளதாகவும் அறியவருகிறது.

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சந்தேகம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சார்ந்த பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்பிக்கத் தயாராகி பல வாரங்கள்கழிந்துவிட்டன. அவர்களிடம் அதைச் செய்வதற்கான உற்சாகம் இப்போது இல்லை என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிவிப்பில், " இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள் எதிர்வரும் 28ம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கதுக்கு அறிவிக்கின்றோம். காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் இணைந்து 28ம் திகதி முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் மற்றும் கூட்டு ஹர்த்தாலில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது. இதனால் நாளை இலங்கையின் இயக்கம் முற்றாக முடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction