பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையால் கடந்த இரண்டு மாதங்களாக பாடசாலைகளும், பல்கலைக் கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இவற்றை மீளத் திறப்பது குறித்து கல்வி அமைச்சு சுகாதாரத் தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், “இதுவரையில் இவற்றைத் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை. பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தும் வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்பின்னர் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.” என்றுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    