"யூரோ -2020 " கோப்பைக்கான காலிறுதிப் போட்டியில் விளையாடிய சுவிஸ் தேசிய காற்பந்து அணி, ஸ்பெயினிடம் பெனால்டி நேரத்தில் தோற்றிருந்த போதும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுடனான ஆட்டத்தில் அவர்கள் தங்கள் திறமை நன்கு வெளிப்படுத்தினார்கள்.
அவர்களது திறமையான விளையாட்டு அந்த அணிக்கான அந்தஸ்தினை அனைத்துத் தரப்பிலும் உயர்த்தியுள்ளது. அதனால் அணியின் வீர்ரகள் வார இறுதியில் வீடு திரும்பியபோது, சூரிச்சின் விமான நிலையத்தின் ஓடுதளத்தில், அவர்களுக்கு வீரர்களுக்கான சிறப்புக் கௌரவத்துடனான வரவேற்பு வழங்கப்பட்டது.
சுவிற்சர்லாந்தின் தேசிய இசைக்கருவியான அல்ப்ஹோர்ன்ங்கள் இசைக்க, விமான ஓடுபாதையில் நீர்வளைவு அமைத்தும், சுவிஸ் தேசியக் கொடியின் வண்ணங்களாலும், அவர்களுக்கு மிகச் சிறந்த உற்சாக மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருக்கும், “யூரோ காய்ச்சல்” கோவிட் தொற்றுக்களை அதிகரிப்பு ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். கோவிட் -19 பணிக்குழுவின் துணைத் தலைவர் உர்ஸ் கர்ரர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள செவ்வியில், "மக்களின் கட்டுப்பாடற்ற பரவசம் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தொற்றுநோய்களை அதிகரிக்கும், யூரோ கால்பந்து வைரஸுக்கு ஏற்ற களமாகும், சுவிற்சர்லாந்து குளிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது தற்போதைய நடத்தையைப் பொறுத்தது" என்றும் கூறியுள்ளார்.
சுவிற்சர்லாந்தில் புதிய கோவிட் தொற்றுக்கள் ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளன !