வியாழக்கிழமை இங்கிலாந்தின் ஓல்ட் டிரஃபோட் மைதானத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 125 ரன்களால் அபார வெற்றி கொண்டுள்ளது.
டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்களைக் குவித்தது.
பதிலுக்கு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 34.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ரன்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை ரிவெர்சைட் மைதானத்தில் இலங்கை அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய் இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக ப்ரெட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மார்ரிஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 37.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மாத்திரமே இழந்து 206 ரன்களைப் பெற்று வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக பேட்டிங்கில் ப்லெஸ்ஸிஸ் 96 ரன்களையும், ஹசிம் அம்லா 80 ரன்களையும் குவித்தனர். நாளை சனிக்கிழமை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளும் பலப் பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள அதேவேளை இந்தியா 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மூன்றாம் இடத்தில் 11 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் உள்ளது.
வெளியேறும் கட்டத்தில் புள்ளி எதுவும் பெறாத ஆப்கானிஸ்தான் அணியும் அதற்கடுத்து 3 புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அதற்கடுத்து 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணியும் உள்ளன. 6 புள்ளிகளுடன் இலங்கை அணி 7 ஆம் இடத்திலும், 7 புள்ளிகளுடன் பங்களாதேஷ் 5 ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 6 ஆம் இடத்திலும் உள்ளன.