திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் உள்ள கிராமம் தளபதிசமுத்திரம். இங்கே தமிழகத்தின் இரும்புக் கால வாழ்விடப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஊர், நான்குனேரியில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில், திருநெல்வேலி – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இவ்வூரானது தற்போது அதிக அளவில் வீடுகள் நிறைந்து காணப்பட்டாலும் இரும்புக்கால வாழ்விடப்பகுதியின் எச்சங்களான கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு பானையோடுகள் அதிக அளவில் பரவிக் காணப்படுகின்றன.
மேலும் இவ்வூரில் 2 கி.மீட்டர் தொலைவில் வடக்கே பெருவேம்புடையார் சாஸ்தா கோவில், சாஸ்தா புரம் அருகே பரந்தளவில் காணப்படும் இரும்புக்கால புதைவிட பகுதியின் வாழ்விடப்பகுதியாக தளபதிசமுத்திரம் இருந்திருக்கலாம் என தமிழக தொல்லியல் துறை அறிஞர்கள் கருதுகின்றனர். மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்ட இரும்புக்கால வாழ்விடப்பகுதியாது இங்கே 2025-ஆம் ஆண்டுக்குள் தொல்லியல் ஆய்வு தொடங்கும் என தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.