இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியுள்ளனர்.
கடந்த தீபாவளி பண்டிகையை அடுத்து டெல்லியில் நச்சு கலந்த புகை மூட்டம் நிலவிவருகிறது. இந்த காற்றில் உள்ள சிறிய துகள்கள் மனிதர்களின் நுரையீரலை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் தரக் குறியீடு அல்லது AQI என்பது பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட எண்ணிக்கை "நல்லது" என்றும், 51 மற்றும் 100க்கு இடையே "திருப்திகரமானது" என்றும் கருதப்படுகிறது.
ஆனால் இந்த தரக் குறியீடு நகரின் பல பகுதிகளில் நேற்றைய தினம் முதல் 400க்கு அருகில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளதுடன் இது மோசமானது எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாசுபாடு காரணமாக சில பள்ளிகள் ஏற்கனவே கடந்த வாரம் மூடப்பட்டிருந்தன, இந்நிலையில் கல்லூரிகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நச்சு புகைமூட்டம் நகரத்தை மேலும் மோசமாக்கினால் காற்றின் தரத்தை மேம்படுத்த லாக்டவுனை அறிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க டெல்லி அரசாங்கம் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 21 வரை கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன, நகரில் உள்ள 11 நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் ஐந்து மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாகன மற்றும் தொழில்துறை உமிழ்வுகள், தூசி மற்றும் வானிலை போன்ற காரணிகளின் கலவையானது டெல்லியை உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக மாற்றி இருப்பது குறிப்பிடதக்கது.