free website hit counter

56 உதவிப் பேராசிரியர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை நியமனம் செய்ததாலும், போதுமான நிதி இல்லாததாலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவியது.

இதை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள் பல கட்ட போராட்டங்களில் இறங்கினர். இதையடுத்து, தமிழக அரசே இப்பல்கலைக்கழகத்தை ஏற்க முடிவு செய்தது. அதன்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

அதன்பிறகு தமிழக அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. மேலும் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட உதவி பேராசிாியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அதில் 56 உதவி பேராசிரியர்கள் உரிய கல்வித்தகுதி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதாவது, உதவி பேராசிரியர்கள், அவர்கள் நியமனத்தின்போது குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்கவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல், அதில் 38 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பணி நிரவல் மூலம் மீண்டும் பணி அமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 18 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில், திடீரென 56 உதவி பேராசிரியர்களையும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும் தமிழக அரசு உயர் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட 56 உதவி பேராசிரியர்களும் உரிய கல்வி படிக்காமலும், உதவி பேராசிரியருக்கான போதுமான கல்வி தகுதி இல்லாமலும் பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டது.

இவர்கள் மீது ஆட்சி மன்றக் குழு முடிவின்படியும், தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின்படியும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction