ஐரோப்பாவில் கடுமையான, வறண்ட வானிலை, 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டிய வெப்பநிலை நிலவி வருகிறது. ஆகஸ்ட் 11மற்றும் 12ம் திகதிகளில் அதிகளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
1950 முதல் குறிப்பிட்ட இந்தத் திகதிகளில் இவ்வளவு அதிக வெப்பநிலை இருந்ததில்லை என, ஸ்பெயின் மாநில வானிலை ஆய்வு நிறுவனம் (AEMET) தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவில் அதிக வெப்பநிலைக்கான புதிய சாதனையை ஸ்பெயின் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக, ஸ்பெயின், துருக்கி, கிரீஸ், வடக்கு மாசிடோனியா, அல்பேனியா மற்றும் குரோஷியாவில் தொடர்ச்சியான தீ விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. துருக்கி தெற்கு மாகாணமான ஒஸ்மானியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கைகளின் போது வனத்துறை ஊழியர் ஒருவர் இறந்ததாகவும், மேலும் நால்வர் காயமுற்றதாகவும் அரச தரப்புத் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
கிரீஸில், 62 விமானங்களின் உதவியுடன் 4,850 தீயணைப்பு வீரர்கள் பல பகுதிகளில் ஏற்பட்ட பல தீயை எதிர்த்துப் போராடி வருகின்றார்கள். பலமான காற்றினால் காட்டுத்தீ தொடர்ந்து எரிவதாக கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால்,அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள்.
அல்பேனியாவில், தென்பகுதி மலைகளில் ஏற்பட்ட தீ, தோன்றிய முப்பது நிமிடங்களுக்குள் பெருந்தீயாக மாறியதாக, நகரவாசிகள் விவரிக்கின்றனர். ஸ்பெயின் 14 தீ விபத்துகள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலையுடன் போராடி வருகிறது: ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் அதிகபட்ச எச்சரிக்கை.
ஸ்பெயினில், தற்போது குறைந்தது ஏழு பகுதிகளில் 14 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக 6,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை, தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மூன்று தீயணைப்பு வீரர்கள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான லாஸ் மெடுலாஸ் இயற்கைப் பகுதியின் தாவரங்கள் மிகவும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் X இல் . "நிலைமை தீவிரமாகவே உள்ளது; அதிகபட்ச எச்சரிக்கை அவசியம்," என்று எழுதியுள்ளார். தீயை எதிர்த்துப் போராடுவதற்கு ஆதரவளிக்க, அரசாங்கம் பல பகுதிகளுக்கு இராணுவ அவசரகாலப் பிரிவை (UME) அனுப்பியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.