free website hit counter

ஈழத்தின் ஓவிய ஆளுகை ரமணி  !

கலாச்சாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமையான ஓவியர்,சிற்பி,  ரமணி மறைந்தார்.  யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம்  (ரமணி) ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர். 

யாழ்ப்பாணத்து ஓவியர்களில் நாம் மிகவும் இரசித்த ஓரு ஓவியர் ரமணி. வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, மாற்றாக நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் எம்மை அதிகம் கவர்ந்தவை.  அதுவெ அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது.  தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து  அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும். 

அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் கூட தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புக்களுக்காக அவரது நளினமான எழுத்து வடிவங்கள் ரமணியை அடையாளப்படுத்தின. 

ரமணியின் ஓவியங்களை மேலும் ரசிக்கச் செய்தவர், எம்முடைய ஓவிய ஆசிரியர் கிருஷ்ணதாசன். ஒவியர் ரமணிக்கு நெருக்கமான அவர் வரையும் ஓவியங்களிலும், எழுத்துக்களிலும், ரமணியின் ஓவியப்பாணி வெளிப்படும். அவரது அதீதமான அவரது சிலாகிப்புக்களும், ரமணியின் ஓவியங்கள் மீதான எமது ரசணை அதிகமாவதற்கு ஒரு காரணமெனலாம். 

ரமணி வெறும் ஓவியர் மட்டுமல்ல தேர்ந்த ஒரு சிற்பியும் கூட என்பது பின்னால் நாம் தெரிந்து கொண்ட விடயம். யாழ் இந்துக்கல்லூரி ஆறுமுக நாவலர் பெருமானின் உருவச்சிலை , தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் உருவச்சிலை, எனப் பல பெரியார்களின் உருவச்சிலைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கலைஞர்.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள் !

- மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula