free website hit counter

டான் - விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரவுடித்தனம் செய்து வாழ்பவன் மட்டுமே ‘டான்’ கிடையாது – தனக்குப் பிடித்த, தன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டுபவனும் ‘டான்’தான் என்று புதுவிதப் பொருளை ஒரு கொண்டாட்டமான திரைக்கதையின் வழியாக உரைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

அத்துடன் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகள் - மாணவர்கள் மீது கண்டிப்பு காட்டுவதும் கோபப்படுவதும் எதற்காக என்று காலங் காலமாக சொல்லப்பட்டு வரும் நியதியையும் நெற்றிப்போட்டில் அடித்தமாதிரி அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.

சொல்லப்பட்ட செய்தியைத் திரும்பவும் சொல்லும்போது, அது ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்க வேண்டுமே, அதற்காக காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அளவாக, அழகாகத் தூவி ஒரு முழுமையான பொழுதுபோக்குப் ‘பேக்கேஜ்’ ஆகக் கொடுத்திருக்கிறார்.

மிதிவண்டியில் நெகிழிப் பொருட்களை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்யும் ஏழைக் குடும்பத் தலைவர் சமுத்திரக்கனி. அவருடைய ஒரே மகன் சக்கரவர்த்தி (சிவகார்த்திகேயன்). அவனை எப்படியாவது இன்ஜினியர் ஆக்கிப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அப்பா. ஆனால், மகனுக்கு ஏட்டுப் படிப்பில் விருப்பமில்லை. காலந்தோறும் தாம் என்னவாக ஆகப்போகிறோம் என்று தெரியாமல் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் அலை பாய்கிறான். படிக்கக் கட்டாயப்படுத்தும் கல்லூரியில் செய்யும் குறும்புகளால் மாணவர்களின் செல்ல ‘டான்’ ஆகவும் நிர்வாகத்துக்கு தலைவலியாகவும் வலம்வரும் அவன், இறுதியில் என்னவாக ஆகிறான், அவன் தன்னுடைய தந்தை காட்டிய வழியை ஏற்றானா, அல்லது தனது வழியைக் கண்டறிந்தானா என்பதுதான் கதை.

பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, தன் வழியைக் கண்டுகொண்டபின் வெற்றியைத் தொட்டு நிற்பவனின் வாழ்க்கை என மூன்றுவிதமான வாழ்க்கையை வாழ்த்து காட்ட வேண்டிய சவால் கதாநாயகனுக்கு! அதற்கு கச்சிதமான முகமாகவும் பன்முகத் திறமையோடும் வந்து வாழ்ந்து காட்டியிருக்கிறார் சிவகார்த்தியேயன். மிக மிக முக்கியமாக பள்ளிக் காலத்துக்கு ஏற்ப தன் உடலின் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில் சிவகார்த்திகேயனின் உழைப்பு வியக்க வைக்கிறது. அனிருத் ரவீந்தரின் துள்ளாட்டம் போட வைக்கும் இசைக்கு அட்டகாசமாக நடனம் ஆடியிருக்கும் வேகமும் நளினமும் அவரது அசுர உழைப்புக்குச் சான்று. இவற்றுடன் கணமாக நடிப்பைப் கொடுப்பதில் தன்னுடைய முந்தைய படங்கள் அனைத்தையும் முந்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளையும் வைத்துக்கொள்ளாமல் அதைப் போகிற போக்கில் ஏற்றுக்கொண்டு, ‘நான் அப்படி ஆகட்டுமா, இப்படி ஆகட்டுமா? என்று மனதை மாற்றிக்கொண்டேயிருக்கும் எல்லோருடைய கதாபாத்திரமாகவும் இருக்கும் சக்கரவர்த்தி கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

அப்பா மீது சிறுவயது முதலே கொண்டுள்ள பயம், கல்லூரியில் துணை முதல்வராக வரும் எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால்விட்டு ஜெயிக்கும் திறன், பிரியங்கா மோகனுடனான காதலும் அதை இரண்டாம் முறைக் காப்பாற்றிக்கொள்ள வெளிப்படுத்தும் வயதுக்கேயுரிய துணிச்சல், நண்பர்களோடு அடிக்கும் லூட்டி, அப்பாவைப் புரிந்துகொள்ளும் தருணம் வரும்போது ஏற்படும் உணர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பாணியிலேயே நடித்து ரசிகர்களைக் கொள்ளை கொள்கிறார்.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனை முறைத்துகொண்டே காதல் செய்யும் பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் இன்னும் கச்சிதமான இணையாக நடித்து ரசிகர்களின் மனதை அள்ளிக்கொள்கிறார். சக்கரவர்த்தி மீதான அவருடைய காதல் ஏற்படுத்தும் காயமும் அவருடைய போலீஸ் அப்பா கதாபாத்திரமும் திரைக்கைக்கு நச்!

கல்வி குறித்து கருத்து சொல்லியே பழக்கப்பட்ட கதாபாத்திரங்களில் வந்த சமுத்திரக்கனி, இதில் ஒரு ஏழை அப்பாவின் இருவிதப் பரிமாணங்களை அட்டகாசமாக வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பான முரட்டு அப்பாவாக.. பின்னொரு சூழலில் வேறொரு அப்பாவாக என அனைத்து அப்பாக்களின் சாயலை அட்டகாசமாக நமக்குள் கடத்திவிடுகிறார்.

‘மாநாடு’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி பூனையாக எஸ் ஜே சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். பேசக் கூடாது, காதலிக்கக் கூடாது என்று மாணவ, மாணவிகளை மிரட்டுவதில் தொடங்கி, இவை எதற்கும் கட்டுப்பட்டாத ‘டான்’ சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டுவது வரை, எப்படிப்பட்ட எதிர்மறைக் கதாபாத்திரம் என்றாலும் புகுந்து புறப்பட்டு வருவேன் என்பதைக் காட்டியிருக்கிறார்.

நகைச்சுவை ஏரியாவில் ராதா ரவி, மனோபாலா, ராம்தாஸ், காளி வெங்கட், ஜார்ஜ், சிங்கம்புலி ஆகியோருடன் சிவகார்த்திகேயனின் நண்பர்கள் குழாமில் இடம்பிடித்திருக்கும் சூரி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், சிவாங்கி என பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக சூரியும் சிவகார்த்திகேயனும் பேசும் சீனப் பேச்சொலி வழக்கில் பேசும் தமிழ் வயிற்று வலியைக் கிளப்புகிறது.

எஸ்.ஜே.சூர்யாவை தந்திரமாகக் கல்லூரியை விட்டு அனுப்புவது, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தகுதித் தேர்வு நடத்துவது போன்றவை நிஜத்தில் சாத்தியமற்றவை என்றாலும் கதையின் விறுவிறு ஓட்டத்தில் இதுபோன்ற ஓட்டைகள் அடைபட்டுப் போகின்றன.

அனிருத்தின் இளமை துள்ளும் இசையும் கே.எம்.பாஸ்கரனின் வண்ணமயமான ஒளிப்பதிவும் கொண்டாட்டமும் செண்டிமெண்டும் நிறைந்த கதைக்கு வலு சேர்த்திருக்கின்றன.

இரண்டு மணி நேரத்துக்குள் கதை சொல்லி முடிக்கவேண்டும் என்கிற நிலை உருவாகிவிட்ட தமிழ் சினிமாவில் சுவையாகவும் ‘கிரிப்’ ஆகவும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கிறது என்று ‘டராக்’கை விட்டு நகராமல் 2.45 நிமிடம் கதை சொல்லி நம்மை கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் ‘டான்’ அனைத்து வயதினருக்குமான குடும்பப் படம்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction