free website hit counter

சக்ரா விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அந்நியர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை உள்நாட்டுக்காரர்களிடம் திருட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சொல்வதுண்டு.

இந்தப் படத்தில் பெற்ற சுதந்திரத்தையும் நாட்டையும் பாதுகாக்க ராணுவத்தில் பணிபுரிந்து பெற்ற அசோகச் சக்ரா பதக்கத்தை அதுவும் சுந்ததிர தினத்தன்று திருடர்களிடம் பறிகொடுத்தால், அந்தப் பறிகொடுத்தவருடைய மகன் கொள்ளையர்களைப் பிடிக்க தனிமனித ராணும் ஆனால் அதுதான் இந்தச் சக்ரா. ஒருவரிக் கதையாக கேட்கும்போது இருக்கும் இந்தப் படத்தின் கதை, ஹீரோயிசத்துக்கான டெம்பிளேட்டுகளில் சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கிறது.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும்போது சென்னை மாநகரில் ஐம்பது வீடுகளில் ஒரு நூதன கொள்ளை கும்பல் பணம் மற்றும் நகைகளை ஆட்டையைப் போட்டு அள்ளிச் செல்கிறது. வெகுண்டு எழும் காவல்துறை தனிப்படை அமைத்து வேட்டையைத் தொடங்க, ஒரு சிறிய ‘க்ளூ’ கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். அப்பாவைத் தொடர்ந்து ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிவரும் விஷால், கொள்ளைபோன ஐம்பது வீடுகளில் தன்னுடையதும் ஒன்று எனத் தெரிந்ததும் உடனடியாக விடுமுறை பெற்று வீட்டுக்கு விரைகிறார். வீட்டுக்கு வந்ததும் பணம், நகை போனதற்குக் கூட கலங்காத விஷால் தனது அப்பாவின் அசோகச் சக்கர விருதின் பதக்கம் களவாடப்பட்டதில் பொங்கியெழுந்து சக்ராவை மீட்கப் புறப்படுகிறார். அதற்காக நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் கைகொடுத்தாலும் விஷால் தனது மூளை பலத்தை முதலீடாக வைத்து கொள்ளையர்களின் நோக்கத்தை எப்படி அறிந்துகொண்டார், அவர்கள் சக்ராவையும் களவாடிச் செல்லவேண்டிய அவசியம் என்ன, தனது வீரத்தால் அவர்களுக்கு விஷால் தரும் பதிலடி என்ன ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

விஷால் ஏற்கெனவே புலனாய்வு செய்யும் கதாநாயகனாக ‘துப்பறிவாளன்’, ‘ இரும்புத்திரை’ ஆகிய படங்களில் தேவைப்படும் அளவுக்கு ஆக்‌ஷன் செய்து கவர்ந்தார். அந்தப் படங்களும் வெற்றிபெற்றன. ஆனால் இந்தப் படத்தில் இவ்விரு படங்களின் ‘ஸ்டைல்’ இருக்கிறதே தவிர, திரைக்கதையில் ஏகத்துக்கும் ஹீரோவையும் ஹீரோயிசத்தையும் தூக்கிப் பிடிப்பதற்கான வேலையில் மட்டும் இயக்குநர் கவனமாக இருந்துள்ளார்.

ஒரு ராணுவ அதிகாரி சொன்னால் காவல்துறை தலையாட்டி பொம்மையைப்போல வேலை செய்யும் என்பதில் தொடங்கி ஏகத்துக்கும் லாஜிக் மீறல்கள். ‘ஹேக்கிங்’ ஆட்கள், டிஜிட்டல் திருட்டு ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் கதாநாயகன் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது நாம் வழக்கமான, எதிர்பார்க்கும் காட்சிகளாகவே அமைத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் எனும் களத்தை களவு கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன்.

விஷால் உழைப்பைக் குறை சொல்லமுடியாது. உடல் எடை குறைத்து, சண்டைக்காட்சிகளில் எகிறி அடித்து குண்டர்களை துவம்சம் செய்வதில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், விஷால் திறமையான உரையாடல் காட்சிகள் வழியாக கதாநாயகனுக்கான புத்திசாலித்தனத்தை ‘இரும்புத்திரை’யில் காட்டியதுபோல் இதில் இல்லை.

கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் விசாரணைக் காவல் அதிகாரியாக வந்து விஷால் கூறும் அத்தனை தத்து பித்துகளுக்கும் தலையசைக்கிறார். அதேநேரம் காவல் அதிகாரி வேடம் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. புத்திசாலித்தனமான காவல் அதிகாரியாக அவர் எடுக்கும் முடிவு சொதப்புவதாகக் காட்டியிருப்பது, பெண் மையப் படங்கள் பெருகியிருக்கும் இந்தக் காலகட்டதில் ஹீரோயிசத்துக்கான மிகவும் பிற்போக்குத்தனமாக முட்டுக்கொடுக்கும் செயல். மற்றொரு கதாநாயகியான ரெஜினா, இந்தப் படத்தில் வில்லியாக நடித்துத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தையுமே கூட இயக்குநர் முழுமைபடுத்தவில்லை. ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜியில் வந்து கத்திக்கொண்டேயிருந்த ரோபோ சங்கர், நகைச்சுவை என்ற பெயரில் இந்தப் படத்தில் கத்துகிறார்.

படத்தை பொறுமையாகப் பார்ப்பதற்கான அம்சங்களில் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. அழுத்தமான காட்சிகள், வலுவான தரவுகள், சுவாரசியாமான திரைக்கதை என எதுவும் இல்லாததால் சக்ரா தலை சுற்ற வைக்கிறது.

 

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction