free website hit counter

59வது சொலோத்தூன் திரைப்படவிழாவில் வெற்றிபெற்ற படங்கள் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புகழ்பெற்ற சுவிஸ் திரைப்பட விழாவான சொலதூர்ன் திரைப்பட விழாவின் மிக உயரிய விருதை (Prix de Soleure) இம்முறை L’Audition எனும் ஆவணத் திரைப்படம் வென்றுள்ளது.

இத்திரைப்பட குழுவினருக்கு, சுமார் 60’000 சுவிஸ் பிராங்குகள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. எப்போதும் மனித காருண்யம் பேசும் கரும்பொருட்களை கொண்ட ஆவணத் திரைப்படங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இயக்குனர் Lisa Gerig இன் இந்த ஆவணத் திரைப்படம் சுவிற்சர்லாந்தின் அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்படும் அகதிகளின், நிராகரிப்புக்கான காரணங்களை தேடும் கதையை கரும்பொருளாக கொண்டது.

சுவிற்சர்லாந்தில், அகதி அந்தஸ்து கோரிக்கை கேட்பதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மிக கடுமையானவை. அதற்கான விசாரணை இரு முழுநாட்களாக மத்திய அரசினால் நடைபெறும். இலங்கையின் யுத்த காலத்தின் போது சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்த பெரும்பாலான அகதிகள் இவ்விசாரணையை கடந்து பெரும்பாலும் அகதி அந்தஸ்து நிராகரிப்புக்கு உள்ளானவர்கள். உங்கள் தலையின் மீது குண்டு விழும் போது, உங்களது வீட்டுக் கூரையின் நிறமென்ன, குண்டு போட்ட விமானத்தின் நிறமென்ன என்றளவுக்கு, உண்மையைத் தான் சொல்கிறோமா; என ஆதாரங்களை தேடிக் கொண்டே இருப்பார்கள் இங்குள்ள மத்திய அரசு விசாரணைக் குழுவினர்.  

Lisa Gerig இன் திரைப்படம் அவ்வாறு விசாரணை மேற்கொள்ளும் நான்கு மத்திய அரசு பிரதிநிதிகளையும், நிராகரிக்கப்பட்ட நான்கு அகதி அந்தஸ்து கோரிய நபர்களையும், மறுபடியும் அதே விசாரணையை செயற்கையாக உருவாக்கி, அப்படி அவர்கள் விசாரணையில் என்ன தான் நடந்திருக்கும் என வெளிச்சம் போடும் திரைப்படமாகும். 

இத்திரைப்படவிழாவின் மக்கள் விருதை " Des vrais Suisses " எனும் ஆவணத் திரைப்படம் வென்றது. அதாவது யார் உண்மையான சுவிஸ்காரர்கள் என்பது இத்தலைப்பின் பொருள்.  இயக்குனர் Luka Popadic இன் உருவாக்கத்தில் உருவான இத்திரைப்படம், சுவிஸின் கட்டாய இராணுவப் பயிற்சியில் 18 மாத சேவைப்பணியில் இருக்கும் நான்கு பேரை சுற்றி நகரும் அக்கதை. இந்த நால்வரும், சுவிஸ் மற்றும் இன்னுமொரு அந்நிய நாட்டின் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். எது புதிய சுவிற்சர்லாந்து எனும் கேள்வியை எழுப்பி நிறைவடைகிறது இத்திரைப்படம். 

சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதை சுவிஸ்-போர்த்துக்கல் இயக்குனர் Basil Da Cunha இன் " 2720 "  திரைப்படம் வென்றது. போர்த்துக்கலின் லிஸ்பொன் அருகில் உள்ள நலிவடைந்த கிராமமொன்றில், காவல்துறையின் கெடுபிடியில் காணாமல் போன தன் சகோதரனை தேடும் ஒரு சிறுமியையும், சிறையிலிருந்து விடுதலையாகி முதல் நாள் வேலைக்கு போகத் தயாராகும் ஒரு இளைஞன் ஒருவனையும் சுற்றி நகரும் கதை.  சிறந்த அனிமேஷன் திரைப்படமாக " Cravette" எனும் திரைப்படம் வென்றது. நான்கு இளம் இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய இக்குறுந்திரைப்படம், கர்ப்பமடையும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆழ்மன பயமென்ன, கருவில் உருவாகும் குழந்தையையும், ஒரு இறாலையும் எப்படி அவள் ஒப்பிடுகிறாள் என்பதனை பற்றி பேசும் திரைப்படம். 

சொலொத்தூன் திரைப்படவிழாவின் வெற்றி விருதுகள், ஆவணப்படங்கள் மீதான கரிசனையை, மக்கள் விருப்பத்தினை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- 4தமிழ்மீடியாவிற்காக: ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction