பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா எம்.பி. கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவதையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவத எதிர்க்கட்சிகள் விரக்தியிலும், ஏமாற்றத்திலும் உள்ளது. அதை அவர்களது நடத்தையே வெளிகாட்டுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ், நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புகளிலும் இந்தியா பெயர் உள்ளது. இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதால் ஒன்றும் அர்த்தமில்லை. நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்கள் தவறாக வழி நடத்த முடியாது. பெயரில் இந்தியா என்ற வார்த்தையை கொண்டு வருவதால் எதுவும் நடந்து விடாது. கிழக்கு இந்தியா கம்பெனிபோல் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகின்றன. நாட்டின் பெயரை வைப்பதால் மட்டும் ஆட்சிக்கு வந்து விட முடியாது
தோல்வி அடைந்த நம்பிக்கையற்ற, திசையற்ற, ஓய்ந்து போன, மோடி எதிர்ப்பு என்ற ஒன்றை திட்டத்தை மட்டும் கொண்டுள்ள கூட்டணியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. அவர்கள் திசை தெரியாமல் செல்கிறார்கள். இதுபோன்ற திசையற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்தது இல்லை
கட்சிகள் பாராளுமன்ற விவாதத்தில் இருந்து நழுவுகின்றன. அவர்களின் நடத்தை அவர்கள் எதிர்க்கட்சிகளாகவே இருக்க முடிவு செய்ததை காட்டுகிறது. அவர்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமருவார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவிதி இதுதான். 2024-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும்.
மக்கள் வளர்ச்சிக்காக நாம் உழைக்க வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. அதை பா.ஜனதா மேலும் உயர்த்தும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடுகள் பட்டியலில் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.