free website hit counter

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் இருந்தபோதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழை கிடைத்து வருகிறது. வருசநாடு, சதுரகிரி மலை பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. நேற்று நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதனால் வைகை ஆறு செல்லும் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து மொத்தம் 769 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நிரம்பி இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.

ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றங்கரைகளை ஒட்டிய பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction