கேரளாவில் ஒருவருக்கு பாதிப்புள்ள நிலையில் குரங்கு அம்மை பரவல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 5 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
அந்த மாநிலத்தில் இந்த நோய் பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதையொட்டி கேரள மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், திருவனந்தபுரத்தில் நேற்று உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:-
கடந்த 12-ந் தேதி, பாதிக்கப்பட்ட நபருடன் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணாம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர். அந்த மாவட்டங்களில் சிறப்பு உஷார் நிலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் 164 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்துள்ளனர். மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையங்கள் உருவாக்கப்படும்.
விமானத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் 11 பேர் அமர்ந்து வந்துள்ளனர். அவர்கள் அதிக ஆபத்து உள்ளவர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோர், ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு வாடகைக்கார் டிரைவர், ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தோல் சிகிச்சை நிபுணர் ஆகியோர் முதன்மை பாதிப்பு பட்டியலில் உள்ளனர்.
அவருடன் பயணம் செய்தவர்கள் தங்களை சுயமாக கண்காணித்து வர வேண்டும். 21 நாட்களில் அவர்கள் ஏதேனும் அறிகுறிகளைக் கண்டால் இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பலருடைய தொலைபேசி எண்கள் இல்லை. அவர்களை போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.