சுவிற்சர்லாந்தில் தற்போது கோவிட் நோய்த்தொற்றுகளின் முக்கிய ஆதாரமாக ஓமிக்ரான் வைரஸ் மாறுபாடு உள்ளதென, மத்திய கூட்டாட்சி அரசசுகாதார அலுவலகத்தின் (FOPH) புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 17 முதல் சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்ட அனைத்து கோவிட் வழக்குகளிலும் 55.7 ஒமிக்ரான் மாறுபாடும், முன்னர் ஆதிக்கம் செலுத்திய டெல்டா மாறுபாடு 43.8 சதவீதத்தையும் கொண்டுள்ளது என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் Omicron ஆதிக்கம் செலுத்தும் என சுகாதார அதிகாரிகள் கூறிய கணிப்புகளுக்கு ஏற்ப இது உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, டெல்டாவை விட ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது, ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அது ஆபத்தானது அல்ல என்று நம்பப்படுவதால், அதிக சேதத்தை ஏற்படுத்தாமல் இது கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அடையும் என்று தொற்றுநோயியல் நிபுணர் டிடியர் ட்ரோனோ கூறினார்.
இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்து தனது முதல் கோவிட் மருந்தை அங்கீகரித்துள்ளது.
கோவிட் -19 சிகிச்சை அல்லது தடுப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய ஆன்டிபாடிகளின் கலவையான ரோச்சில் இருந்து ரோனாபிரீவ் என்ற மருந்துக்கு சுவிஸ் மருந்து நிறுவனமான ஸ்விஸ்மெடிக் அனுமதி வழங்கியுள்ளது என்று கட்டுப்பாட்டாளர் அறிவித்தார்.
ரோனாபிரேவ், காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆன்டிபாடிகளின் கலவையானது, 12 வயது முதலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியத்தை உருவாக்காது. அத்துடன் நோயின் கடுமையான ஆபத்து இருக்கும்போது அதனைக் குறைக்கும் என்பதால், கோவிட் நோய்களுக்கான சிகிச்சையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.