free website hit counter

4தமிழ்மீடியாவின் வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக தம்மைக் காட்டிக்கொள்ளுமாறு உக்ரைனுக்கு அமெரிக்கா வலியுறுத்து

உக்ரைன் போர் தீவிரமடைந்ததில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் பதவி விலகினால் தவிர ரஷ்யாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை

என்பதே தற்போது உக்ரைன் பொது மக்களின் நிலைப்பாடாகவுள்ளது. ஆனால் இந்த நிலைப்பாட்டில் இருந்து இறங்கி ரஷ்யாவுடன் எப்போதும் பேச்சுவார்த்தை நடாத்த திறந்த மனதுடன் இருக்குமாறு அமெரிக்க அரச அதிபரான பைடெனின் நிர்வாகம் சமீபத்தில் உக்ரைன் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சனிக்கிழமை வாஷிங்டன் போஸ்டில் வெளியான தகவலில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உக்ரைனை வலுக்கட்டாயமாக பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வருவதற்காக அல்லாது இந்தப் போர் நீண்ட கால போராக நீடித்து அதனால் ஏற்படக் கூடிய கடும் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காகவே தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

8 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் காரணமாக உலகளாவிய பொருளாதாரத்தில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், 2 ஆம் உலகப் போருக்குப் பின் பல தசாப்தங்களுக்குப் பிறகு உலக நாடுகளிடையே அணுவாயுதப் போர் தோன்றும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாஹ்சா அம்னியின் இறப்புக்குப் பின் ஈரானில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் ஆடையை சரியாக அணியாத காரணத்தால் போலிஸ் கஷ்டடியில் துன்புறுத்தப் பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த பெண்மணி மாஹ்சா அம்னியின் இறப்புக்குப் பின் அங்கு மக்கள் போராட்டாம் வெடித்திருந்தது. தற்போது இப்போராட்டம் இன்னும் தீவிரம் குறையாது 50 நாட்களாகத் தொடர்கின்றது.

நாடளாவிய ரீதியில் ஈரான் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் பொது மக்களால் கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களும் தொடர்கின்றன. ஈரானின் பொது மக்கள் மீதான கடும் போக்குக் கொள்கைகளில் இருந்து விடுதல பெற்ற ஈரானுக்குத் தமது ஆதரவு இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடென் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் அதிபர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

மேலும் ஈரான் அதிபர் எப்ராஹிம் ரைசி ஈரானி நகரங்கள் இன்னமும் பாதுகாப்பானவையாகத் தான் இருக்கின்றன என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரானில் மாணவர் போராட்டங்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

 
வெள்ளிக் கிரகத்துக்கு ஏற்பட்ட அழிவு பூமிக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்

எமது சூரிய குடும்பம் தோன்றிய புதிதில் பூமியும், வெள்ளிக்கிரகமும் கிட்டத்தட்ட ஒரே அளவுடனும் ஒரே பதார்த்தங்களாலும் தான் உருவாகி இருந்தன. ஆனால் இன்று பூமி உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாகவும், வெள்ளி மிகவும் சூடான எரிமலைகளால் நிரம்பிய கிரகமாகவும் உள்ளன.

வெள்ளிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை பூமிக்கும் ஏற்படலாம் என எச்சரிக்கின்றார்கள் வானியலாளர்கள். பூமியை விட வெள்ளி சூரியனுக்கு அருகே இருப்பதும் அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டு அதிகளவு கார்பன் மற்றும் கந்தக வாயுக்களைக் கொண்டிருப்பதுமே வெள்ளி சூடாக இருப்பதற்குக் காரணம்.

பூமியில் இன்று பச்சை வீட்டு விளைவு காரணமாகவும் மனிதனின் செயற்பாடு காரணமாகவும் வளி மண்டலத்தில் கார்பன் வாயு அதிகரித்து வருவதால் பூமியின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. இது தவிர வெள்ளியைப் போன்று பூமியில் இனிவரும் காலங்களில் எரிமலை செயற்பாடுகள் அதிகரித்தால் அதன் போதும் மிக அதிகளவு கார்பன் வாயு வெளியேற்றப் படும் என்றும் இது கவலைக்குரிய விடயம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

66 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் கோலோச்சியிருந்த டைனோசர்களைப் பூண்டோடு அழித்த மிகப் பெரிய விண்கல் போன்று ஏதேனும் ஒன்று எமது காலத்தில் பூமியில் மோதினாலும் அதனால் மிகப் பெருமளவு முகில்கள் பூமியை மறைத்து வெப்பத்தினை சடுதியாக உயர்த்தி விடும் எனப்படுகின்றது. இதுவும் உயிர் வாழ்க்கைக்கான முக்கியமான அச்சுறுத்தல் ஆகும்.

இது தவிர விண்வெளியில் பூமிக்கு அருகே இருக்கக் கூடிய நட்சத்திரம் ஒன்று தனது ஆயுட்காலத்தின் இறுதியில் சூப்பர் நோவாவாக வெடித்து சிதறினால் அதில் இருந்து வெளியேறக் கூடிய மிகச் சக்தி வாய்ந்த காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்களும் பூமியில் இருக்கும் உயிரினங்களை சுட்டெரித்து விடும் என்றும் இதுவும் வெள்ளியைப் போன்ற அசுர கிரகமாக பூமியை மாற்றி விடும் என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction