சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு அளவுருக்களுக்கு இணங்க, இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான குறிப்பிட்ட நிதி விதிமுறைகள் குறித்த தனது உடன்பாட்டை உத்தியோகபூர்வ கடனாளர் குழு (OCC) உறுதிப்படுத்தியுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
“இது மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் கொள்கையளவில் இதேபோன்ற ஒப்பந்தம் இதற்கு முன்பு சீனா எக்ஸிம் வங்கியால் வழங்கப்பட்டது. அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இது இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய படியாகும்.” என்று அவர் கூறினார்.
EFF திட்டத்தின் முதல் மதிப்பாய்வை பரிசீலிக்கவும், டிசம்பரில் எதிர்பார்க்கப்படும் IMF நிதியின் அடுத்த தவணையை திறக்கவும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மேலதிக உதவியை பெறவும் இவ் ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“இது இலங்கையின் பொருளாதார மீட்சியில் உலகளாவிய சமூகத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மற்றுமொரு முக்கியமான குறிகாட்டியாகும். பரந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பத்திலும் மற்றும் நாட்டை நிலையான பொருளாதார வளர்ச்சியின் பாதையில் எடுத்து செல்வதிலும் ஒரு விரிவான சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.” என்றார்.
இதேபோன்ற உடன்பாட்டை எட்டுவதற்கு இலங்கை தனது நிதி ஆலோசகர்களின் ஊடாக, அதன் வெளி தனியார் துறை கடனாளர்களுடன் தொடர்ந்தும் ஈடுபடும் என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.