யாழ். மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமிக்க இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவார்கள் என சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் பேசத்தெரியாத அதிகாரியை மாவட்டச் செயலாளராக நியமிப்பது பொருத்தமற்றது என்றும் அது ஜனநாயக விரோதமான செயற்பாடு என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்தும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்திக்கொண்டு யாழ். மாவட்டத்தின் செயலாளராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.