எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஆசிரியர் சேவை சங்கம் இணையக் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தைத் தவிர மேலும் ஒரு ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து 14 ஆசிரியர் சங்கங்கள் இணைந்துகொண்டுள்ளன. அத்துடன், ஆசிரியர் சேவை சங்கம் இணையக் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் இன்றுடன் 7ஆவது நாளாகவும் தொடர்கிறது.
தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை நியாயமான பதில் கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைக்காக 2020ஆம் ஆண்டு உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.