“தற்போதைய அரசாங்கம் அனைத்திலும் ஊழல் செய்து வருகின்றது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் விரைவில் சரிந்துவிழப் போகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றிலும் திருட்டு வேலைகளை செய்து வருகிறது. சீனி, தேங்காய் எண்ணெய், வீதிப் புனரமைப்பு என அனைத்து விடயங்களிலும் ஊழல் செய்கிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சரிந்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரமும் விரைவில் சரிந்து விழப்போகிறது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் திரிபோஷவை வழங்க முடியாத அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் உள்ளது. நாட்டின் சொத்துகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நாட்டின் சொத்துகளை காட்டிக்கொடுக்கிறது.” என்றுள்ளது.