நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளின் 16 உறுப்பினர்களை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
இந்த நிலையில், நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிந்த ஒரு நபராகவே இருந்து வருகிறார். போராட்டங்களை நடத்த பொது மக்களுக்கு உரிமையுள்ளது.
அதேநேரம், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு இணங்க, போராட்டங்களை நடத்த வேண்டாம் என தடை செய்ய அதிகாரம் கிடையாது. தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், செயற்பட முடியாது.
அப்படியென்றால், குறித்த சட்டத்தில்தான் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை குறைந்தது பி.சி.ஆர்.பரிசோதனைக்கேனும் உட்படுத்த வேண்டும். ஆனால், அதனை அரசாங்கம் செய்யவில்லை.” என்றுள்ளார்.