இந்தியா இலங்கை இடையிலான முதாலவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சார்பாக எந்த துடுப்பாட்டக்காரர்களும் அரைச்சதம் அடிக்க முடியாமல் போனாலும் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 262 ஓட்டங்களை அடித்தது. இதில் சம்மிக கருணாரத்ன 43 ஓட்டங்களையும், தசுன் சானக 39 ஓட்டங்களையும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும், அவிஸ்க பெனான்டோ 33 ஓட்டங்களையும், மினோத் பானுக 27 ஓட்டங்களையும் மற்றும் பானுக ராஜபக்ச 24 ஓட்ட்ங்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பாக யுவேந்திர சஹல், தீபக் சஹர் மற்றும் குல்திப் யாதேவ் ஆகிய மூவரும் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டையும் எடுத்தார். குருனால் பாண்டியா 10 ஓவர்களுக்கு 26 ஓட்டங்கள் மாத்திரம் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்திய அணி 263 எனும் வெற்றி இலக்கை கொண்டு பதிலெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர் பிரித்வி சாவ் வெறும் 24 பந்துகளுக்கு 43 ரன்களை எடுத்தார். இவர் ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பெடுத்தாடி நான்கு ஓட்டங்களை இலகுவாக எடுத்து இலங்கை அணி பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார். பிரித்வி சாவ் ஆட்டமிழக்க அடுத்தாக களமிறங்கிய அறிமுக வீரர் இசான் கிசனும் ஆரம்பம் முதலே அடித்தாட தொடங்கினார். இவர் 42 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிரங்கிய மனிஷ் பாண்டே 40 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை எடுத்தார். ஆரம்ப துடுப்பாட்டக்காரர் சிக்கர் தவான் ஆரம்பம் முதலே நிதானமாக துடுப்பெடுத்தாடி 95 பந்துகளுக்கு 86 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அறிமுக வீரர் சூரியக்குமார் யாதேவ் 20 பந்துகளுக்கு 31 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தால் 80 பந்துகள் மீதமிருக்க 263 எனும் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது. இலங்கை அணி சார்பாக தனன்ஜய டி சில்வா இரண்டு விக்கெட்களையும், லக்சான் சந்தகன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
எவ்வாறிருத்தாலும் இந்திய அணியின் எதிர்காலம் என சொல்லும் அளவுக்கு இளம் வீரர்கள் தமது திறமைகளை நிருபித்துக்காட்டியுள்ளனர்.