free website hit counter

யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையை பாதுகாத்து வளர்ப்போம் !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைவாழ் இந்துசைவசமயிகளின் பழைமை வாய்ந்த திருச்சபையாக மிளிர்வது சைவபரிபாலன சபை. இத்திருச்சபை நூற்றுமுப்பத்திரண்டு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.பல்வகை பெருமைகளையும் சிறப்புக்களையும் உடையது.

மேலும் இச்சபையே, இன்றைய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் இந்துமகளிர் கல்லூரி போன்றபெரும் கல்விக்கூடங்களின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்புச் செய்தது. தவிரவும்,தமிழ் இந்துக்களின் தாய் இதழான இந்துசாதனம் என்ற இதழை கடந்த நூற்றுமுப்பதாண்டுகளுக்கு மேலாக வெளியிட்டு தமிழகத்திற்கும் முன்னோடியாகத் திகழ்கிறது.

அருட்பொலிவும் பெருமையும் மிக்க இத்திருச்சபையில் எதிர்வரும் 14.09.2020 திங்கட்கிழமை(ஆவணி பூச நன்நாளில்)புதிதாகஎழுந்தருளச் செய்யப்பட்டவிநாயகர்
மற்றும் சிவகாமசுந்தரியம்பாள் சமேத ஆனந்தநடராஜ மூர்த்திக்கு மகாகும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. முதல் நூறாண்டு காலத்தில் மிகுந்த விறுவிறுப்பாக செயற்பட்ட சபை நடவடிக்கைகள் கடந்த சில தசாப்தங்களாக போர், இடப்பெயர்வு முதலிய பல்வேறு இடர்களாலும் பல்வகை காரணிகளாலும் சில தடங்கல்களுக்கு உள்ளாகி உள்ளமை மறுக்க இயலாதது.

இந்நிலைமாறவேண்டும். மீண்டும் தாய்ச்சபை தலைமைச்சபையாக மறு மலர்ச்சிகொள்ள வேண்டும் என இந்நாளில் பிராரர்த்திப்போம். இவ்வேளையில்,ஈழத்தின் சைவபெருமக்களின் தாய் ஏடான இந்துசாதனத்தை வெளியிடும் பழைமை மிக்க தாய்ச்சபையான யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையின் கடந்தகால பணிகளில் முக்கியமானவற்றை சிந்திப்பதும் சிறப்புக்குரியதாகும்.

இச்சபை 1888ஆம் ஆண்டுசித்திரைமாதம் 19ஆம் நாள் வண்ணை நாவலர் சைவப்பிரகாசவித்தியாசாலையில் தொடக்கிவைக்கப்பட்டது. 1889ஆம் ஆண்டு ஆடி
மாதம் இச்சபையின் பெயர் “சைவபரிபாலன சபை”என்று பிரகடனம் செய்யப்பட்டதுடன், நீராவியடியைச் சேர்ந்த சைவப்பெரியார் ஆறுமுகம்பிள்ளைக்குச் சொந்தமாகவிருந்த சைவப்பிரகாச அச்சியந்திரசாலையும் இதேஆண்டு (1888) சைவபரிபாலனசபைக்குஒப்படைக்கப்பட்டது.

 

11.09.1889 அன்றுதமிழில் இந்துசாதனம் என்றும் ஆங்கிலத்தில் Hindu Organ என்றும் பெயர்களைஉடையதாக பத்திரிகைகள் சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகைகள் இரு வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமை தோறும் டெமிஅளவில் வெளியிடப்பட்டது.

1890ஆம் ஆண்டுநாகலிங்கம் என்பவரால் நடாத்தப்பட்ட Town High School சபையால் பொறுப்பேற்கப்பட்டு LHindu High School என்ற பெயரில் நடாத்தப்படலாயிற்று. இதுவே இன்றைய யாழ்பப்hணம் இந்துக்கல்லூரிக்கு அடிப்படையாயிற்று. இந்தவழியிலேயே இந்து மகளிர் கல்லூரியும் பிற்காலத்தில் உருவானது.

1893ல் சபையில் முதன்மை நிர்வாகப் பொறுப்பு வகித்த மு.பசுபதிச்செட்டியார் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு திருக்கேதீச்சரக்காணி ஏலத்தில்
பெறப்பட்டு திருக்கேதீச்சரத் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இன்றைய திருக்கேதீச்சரக் கோயில் எழுச்சிக்கு காரணமாயிற்று. போர்த்துக்கேயரால்
அழிக்கப்பட்ட இத்தலம் இருந்த இடம் மீளவும் கண்டறியப்பட்டு மீளகட்டியெழுப்பப்பட இந்நிகழ்வே வழி சமைத்தது.

 

1897ல் சுவாமிவிவேகானந்தர் சிக்காக்கோ மாநாட்டில் கலந்து கொண்டபின் இலங்கை-யாழ்ப்பாணம் வழியே தாயகத்திற்கு வெற்றிவிஜயம் மேற்கொண்ட போது
சபையால் தனிச்செயற்குழு உருவாக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக வெற்றிவிழா நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு பற்றி அக்கால இந்துசாதனம் விரிவாக
குறிப்பிடுகின்றது.

1905ஆம் ஆண்டு சைவப்பிரகாசஅச்சியந்திரசாலை காங்கேசன்துறை வீதியோரமாக அமைக்கப்பட்ட புதியகட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அச்சியந்திரசாலை
இன்றும் யாழ். இந்துக்கல்லூரிக்கு தென் பாகத்தில் பெயரளவிலேனும் காணப்படுகின்றது. இது ஈழத்து சுதேசிகளின் அச்சுயந்திரசாலைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. 1906 ஆம் ஆண்டு ஆடி முதல் இந்துசாதனம் மற்றும் Hindu Organ இதழ்கள் றோயல் பிரமாணஅளவில் பிரசுரமாகதொடங்கின.

1910ஆம் ஆண்டுதிருவாளர். நாகலிங்கம் நடாத்தி வந்த விக்டோரியா ஞாபகார்த்த  வாசிகசாலையை சபை பொறுப்பெடுத்தது. 1913 ஆடி முதல் இந்துசாதனம் வாரம் ஒருமுறையும் Hindu Organ வொரம் இருமுறையும் வெளியாகத் தொடங்கியது. 1923ஆம் ஆண்டு ஆடி மாதம் 5ஆம் நாள் முதல் இந்துசாதனம் பத்திரிகையும்
வாரம் இருமுறை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வெளியானது. 1931ல் சைவபரிபாலனசபை இலங்கைஅரசினால் சட்டபூர்வமாக (incorporated)
அங்கீகரிக்கப்பட்டது.

1938ஆம் ஆண்டு இச்சபையின் செயற்பாடு இலங்கையை கடந்து தமிழகத்திற்கும் விரிந்தது. அவ்வகையில் அந்த ஆண்டு தமிழகத்து சிதம்பரத்திலுள்ள
புண்ணியநாச்சிமட தருமபரிபாலனத்தை சபை பொறுப்பேற்றது. இத்தருமத்தில் மறவன்புலவுதோப்பு சித்திவிநாயகர் ஆலய பரிபாலனமும் அடங்கியதாக இருந்தது.

1946ஆம் ஆண்டு நாவலர் ஆச்சிரமமண்டபம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அணித்தாக உள்ள பத்துப்பரப்பு காணி வாங்கப்பெற்று
மண்டபவேலைகள் முன்னெடுக்கப்பட்டன. 1947ல் இம்மண்டபம் பூர்த்தியடைந்தது. 1952ல் சங்கானை சிவாலயபரிபாலனத்தை சின்னத்தம்பி தாமோதரம்பிள்ளையிடமிருந்து சபை பெற்றுக்கொண்டது. 1959ல் கோயிலாக்கண்டி சிவன் கோயில் பரிபாலனத்தை பரமசாமிஐயர் நாயகம்மா அவர்களிடமிருந்து சபை பெற்றுக் கொண்டது.

 

1960ல் நீராவியடிகுருக்கள் மட காணியையும் பொறுப்பேற்ற இச்சபை 1963ஆம் ஆண்டுமுதலாக சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர், பாலபண்டிதர், பண்டிதர்,
சித்தாந்தபிரவேசபண்டிதர் ஆகிய சைவம் மற்றும் தமிழ் சார்ந்தபரீட்சைகளை ஆண்டு தோறும் நடாத்தத்தொடங்கியது. 1964ல் வேதாரணியம் கார்த்திகை மட தருமபரிபாலனத்தையும் பொறுப்பேற்று விரிந்த பெரிய- உயரிய திருச்சபையாக மலர்ச்சி கண்டசைவபரிபாலனசபையானது 1972 முதல் அகில இலங்கைரீதியில் சைவசமயபாட பரீட்சைகளையும் நடாத்தத் தொடங்கியது.  இப்பரீட்சைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கம், வெள்ளிபதக்கங்களுடன் சான்றிதழ்களையும் வழங்கியது.

1974ல் சைவ நூலகம் ஒன்றையும் உருவாக்கிய இச்சபை 1975ல் ஜோர்ஜ் மன்னர் ஸ்தாபனக் கட்டடத்தின் ஒருபகுதியையும் பொறுப்பேற்றுக் கொண்டது. இவ்வாறு எழுச்சிகண்ட சபையின் பணிகள் பலவாறாக விரிந்திருந்தன. இச்சபையின் இதழ்களும் பத்திரிகைகளும் வாரம் தோறும் வெளியாயின. ஆண்டுதோறும்
சைவமாநாடுகள் நடாத்தப்பட்டன.

தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் பல்வேறுஅறிஞர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினர். அவ்வாறான நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் கலந்து கொண்டு செந்தமிழ் இன்பமும் ஆன்மீகஉணர்வும் பெற்றனர்.

அறிஞர்களின் சங்கமநிலையமாக திகழ்ந்த இச்சபையில் உரையாற்றுவது என்பதை பேச்சாளர்கள் தமது பெருங்கௌரவமாக கருதினர். இந்துசாதனத்தில் தம் எழுத்து வெளியாவது என்பதும் எழுத்தாளர்களால் அவ்வாறே நோக்கப்பட்டது. தமிழகத்து அறிஞர்களும் தாம் ஒருமுறை இச்சபையில் உரையாற்றமுடியாதா? என. விரும்பினர். இவ்வாறு ஆண்டுதோறும் மாநாடுகள், வாரம் தோறும் பிரசுரங்கள் என்பவற்றுடன் மாதம் தோறும் சமய விழாக்களும் கூட்டங்களும் சபையில் இடம்பெற்றன. பழம் நூல்கள் பெருமளவில் சபையால் பதிப்பிக்கப்பட்டன. நலிந்தோர்க்குஉதவிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி விருத்திக்கு பெரும் பங்களிப்புகள் செய்யப்பெற்றன. இயற்கை அனர்த்தங்களின் போது சபையின் நிதியில் பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு சீரும் சிறப்புமாக பன்முகப்பட்டநிலையில் சமயதமிழ் சமூகப் பணிகளில் ஈடுபட்ட சபைக்காக பலரும் பல்வகையில் உதவிகளை செய்தனர். பலவள்ளல்கள் தம் நிலங்களையும் பொருளையும் சபை வளர்ச்சிக்காக எழுதி வைத்தனர். அவையே இன்றும் சபை நிமிர்வோடு திகழக் காரணமாகிறது.

 

இவ்வாறு எழுச்சிகண்டிருந்த இச்சபையின் பணிகள் கடந்த சில தசாப்தங்களில் சற்றே வீழ்ச்சி கண்டிருந்தது. எவ்வாறாயினும் 2002ல் சிதம்பரம் புண்ணியநாச்சியார் திருமடம் சுமார் நாற்பது இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்டமையும் சேக்கிழார் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டமையும் சபையின் அண்மைக்காலப் பணிகளில் முதன்மையானவை. 2008ல் திருவாவடுதுறைஆதீனம் இச்சபையின் பணிகளை பாராட்டி “சித்தாந்தசைவச் சுடர் நிலையம்” என்ற உயர் விருதை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சபையின் மண்டபத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடராஜமூர்த்தியின் திருவடிவமும் நால்வர்திருவடிவங்களும் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சிவகாமசுந்தரியம்மை வடிவம் இல்லாமலும் முறையான வழிபாடுகள் இல்லாமலும் அவை காணப்பெற்றன. இதுவும் சபையின் குழப்பநிலைகளுக்கு ஒருகாரணமாகலாம் எனவும் சில அன்பர்கள் கருதினர்.

சைவத்திருச்சபையில் இறைவனை இறைவியோடு எழுந்தருளச் செய்து பக்தியோடு பூசித்து வழிபாடாற்றுவதே முறை என்பதையும் அதுவே ஆகமநெறி மற்றும்
அறிஞர்களின் கருத்து என கண்ட சபை சார்ந்த பெருமக்கள் விநாயகர் மற்றும் சிவகாமசுந்தரிஅம்பான் வடிவங்களையும் நடராஜமூர்த்தியோடு சேர்த்து
பிரதிஷ்டித்து கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.

இச்சபை வைதிகசைவத் திருச்சபை. அவ்வகையில், சைவமானது வேதத்தின் உண்மைப் பொருளை வெளிப்படுத்தும் வைதிகசமயம் என்பதை தத்துவமரபில் நின்று நிறுவுவதில் பெரும் பணி செய்தவரான சைவபாடியமான ஸ்ரீ கண்டபாடியம் அருளிய ஸ்ரீ கண்டசிவாச்சார்யரின் குருபூசைநாளான ஆவணிப்பூசத்தில் இச்சபையின் நடராஜ மூர்த்திக்கு திருக்குடநன்னீராட்டுவிழாநடைபெறுவது சிறப்புக்குரியது.

இப்பணியால்,எல்லாம் வல்ல தில்லையில் ஆனந்த கூத்தாடும் இறைவன் திருவருளால்,மீண்டும் இத்திருச்சபைதன் பழையபெருமைகளை விஞ்சும் வகையில்
உயர் நிலைகாண பிரார்த்திப்போம். இச்சபை இலங்கைவாழ் தமிழ் இந்துக்கள் யாவருக்கும் உரியஉரிய சபை என்பதைமனம் கொள்வோம். இச்சபையின்
எழுச்சிஎன்பதுநம் பழைமையான பாரம்பரிய எழுச்சிக்கும் வழி கோலும் என்பதைகருத்தில் கொள்வோம்.

தியாக. மயூரகிரிக்குருக்கள்,
ஆசிரியர்,
இந்துசாதனம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction