உலகளாவிய ரீதியில், குறைந்தது 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் எச்சரித்தார்.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த செவ்வியில், " நாடுகளும் அவற்றின் மக்களும் தொற்றுநோயைப் பற்றி மனநிறைவு அடையக்கூடாது. கோவிட் -19 தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தடுப்பூசி வழங்கும் விகிதங்கள் அதிகரிக்க வேண்டும் என்றும், ஐரோப்பாவின் தடுப்பூசி வழங்கல் மிக மெதுவாக இருப்பதாகவும், தடுப்பூசியில் 70 சதவிகிதம் இடப்பட்டு, குறைந்தபட்ச பாதுகாப்புக்கு வரும் போதுதான் தொற்றுநோய் முடிந்துவிடும் எனக் கொள்ள முடியும் என்றார்.
WHO இன் ஐரோப்பிய பிராந்தியத்தை உருவாக்கும் 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 26 சதவீத மக்கள் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில், 36.6 சதவிகித மக்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் 16.9 சதவிகிதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று ஏ.எஃப்.பியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய பிராந்தியத்தின் 53 நாடுகளில் 27 நாடுகளில் இந்திய மாறுபாடு தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஐந்து வாரங்களாக குறைந்து அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. உலகளவில், புதிய தொற்றுக்கள் தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு குறைந்துவிட்டன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பிறழ்வுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டாலும், மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும், க்ளூக் வலியுறுத்தினார். இது தொடர்பில் பெல்ஜிய மருத்துவர் ஒருவரின் முக்கிய கவலை தெரிவிக்ககும் போது, "மக்கள் தங்கள் பாதுகாப்பினைக் கைவிடுகிறார்கள், அவர்கள் மனநிறைவு அடைகிறார்கள். குறிப்பாக கோடை விடுமுறை நாட்களுக்குள் செல்கிறார்கள். கூடுதலாக, பெரிய கூட்டங்கள், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்போட்டிகள் என்பன அச்சந்தருபவையாகவே உள்ளன என்றார்.
"இறுதியாக கோவிட் -19 க்கு சிவப்பு அட்டையை வழங்குவதாயின், சமூக தூரத்தை பராமரிக்கவும் முகமூடிகளை அணியவும், தடுப்பூசிகள் இடப்படுவதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வேண்டும். மேலும் ஐரோப்பிய நாடுகள் அதற்கான அதிக ஒற்றுமையைக் காட்ட வேண்டும். சில நாடுகள் மக்கள் தொகையில் இளைய, ஆரோக்கியமான பகுதிக்கு தடுப்பூசி போடத் தொடங்குகின்றன என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, அதே நேரத்தில் நமது பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் இன்னும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் தடுப்பூசியினை வழங்கியிருக்கவில்லை," என்று அவர் விசனம் தெரிவித்தார்.