free website hit counter

ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 5

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்டிரீமிங் நுட்பம் தோன்றி வளர்ந்த பயணத்தில், இசையின் ஆதிகால பங்களிப்பை பார்த்தோம். இனி, திரைப்படம் ஸ்டிரீமிங் பாதையில் எப்படி இணைந்தது என பார்க்கலாம். இந்த பயணத்தையும் சினிமாவின் வரலாற்றுடன் தான் துவக்க வேண்டும்.

சினிமாவின் பூர்வ கதை

திரைப்படத்தின் வரலாறு நீண்ட நெடியது. ஆனால், இந்த முழு வரலாற்றையும் திரும்பி பார்க்காமல், சினிமா ரசிகர்களை வந்தடையும் விதத்தில் நவீன தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் எத்தனை
தீவிரமானது என்பதை புரிந்து கொள்ள உதவும், அம்சங்களை மட்டும் சுருக்கமாக பார்க்கலாம்.

திரைப்பட வரலாறு என்றதுமே, பிரான்சின் லூமியர் சகோதரர்கள் (Auguste and Louis Lumière ) தான் தவறாமல் நினைவுக்கு வருவார்கள். நாமறிந்த வகையில் சினிமா இவர்களிடம் இருந்து தான் துவங்குகிறது. 1895 ம் ஆண்டு இந்த சகோதரர்கள் அறிமுகம் செய்த சினிமேட்டோகிராப் (Cinématographe) சாதனம் தான், முதல் முறையாக ரசிகர்கள் கூட்டாக திரைப்படத்தை பார்க்க வழி செய்தது. இதன் காரணமாகவே, லூமியர் சகோதரர்கள் திரைப்படத்தை கண்டுபிடித்தவர்கள் என கொண்டாடப்படுகின்றனர். ஆனால், திரைப்படத்தை கண்டுபிடித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வேறு சில முன்னோடிகளும் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

தாமஸ் ஆல்வா எடிசன், வில்லியம் லிங்கன், ( William Lincoln), டிக்சன் (Dixon) உள்ளிட்ட பலரும், திரையில் ஒளி நிகழ்த்தும் ஜாலத்தை மனித குலத்திற்கு சாத்தியமாக்கிய மேதைகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருமே திரைப்படம் எனும் நுட்பம் கண்டறியப்பட்ட விதத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்பின் கூட்டு முயற்சியாகவே இது சாத்தியமானது.

 

ஒரு விதத்தில் சினிமாவை மனித குலத்தின் கனவு என்று தான் சொல்ல வேண்டும். ஆதி காலத்தில் இருந்து மனிதனுக்கு இருந்து வந்த கனவு. கற்கால மனிதர்கள் பாறைகளில் ஓவியம் வரைந்த போது, நிகழ் உலகை தங்களால் இயன்ற வகையில் பிரதிபலித்துக்காட்ட விரும்பினர். பின்னர் ஓவியத்தில் தேர்ந்தவர்கள், அவை உயிரோட்டம் மிக்கதாக விளங்க மெனக்கெட்டனர். கவிஞர்களும், எழுத்தாளர்களும் வாழ்க்கையை எழுத்தில் தங்கள் மன சித்திரத்தை கொண்டு வர முயன்றனர். இந்த கனவின் தொடர்ச்சியாக தான், நிஜ உலகை நிழல் உலகாக பதிவு செய்யும் கலை நுட்பமாக சினிமா பரினமித்தது. ஆனால், வாழ்க்கை காட்சிகளை நிகழ்த்திக்காட்டும் கனவு தொழில்நுட்ப நோக்கில் எட்டாக்கனியாகவே இருந்தது.

நிஜ உலக காட்சிகளை அப்படியே தத்ரூபமாக செயற்கை முறையில் படம் பிடித்துக்காட்டும் புகைப்பட கலை நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த பயணத்தில் பெரும் பாய்ச்சலாக அமைந்தது. காட்சிகளை பதிவு செய்வதற்காக புகைப்பட சுருளை ’ஜார்ஜ் ஈஸ்ட்மேன்’ கண்டுபிடித்ததும் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

திரைப்படம் என்பது ஓடும் படங்களின் தொகுப்பாக கருதப்படுவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப நோக்கில் பார்த்தால், ஒளியியல் கோட்பாடு மற்றும் மனித மூளையின் செயல் நுணுக்கம் ஆகியவற்றின் கலைவையாக சினிமா விளங்குகிறது. கண்ணில் பார்த்த காட்சியை அதன் பிறகு, ஒரு நொடியில் 20 பகுதிக்கு கூடுதலான நேரத்திற்கு மூளை அதை நினைவில் நிறுத்திக்கொள்கிறது. இந்த பண்பை பயன்படுத்திக்கொண்டு, நொடிக்குள் அடுத்தடுத்து பல காட்சிகளை தோன்றச்செய்வதன் மூலம், நிஜ வாழ்க்கை போலவே காட்சிகளை தொடர்ந்து நிகழும் உணர்வை மூளை பெறுகிறது. இப்படி தான் திரைப்படம் எனும் அற்புதம் சாத்தியமாகிறது.

இந்த ஒளியியல் பண்பை கொண்டு பிம்பத்தை உருவாக்கி காட்டும் முயற்சி நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 17 ம் நூற்றாண்டில், மேஜிக் லாண்டர்ன் (magic lantern) எனும் சாதனம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஓவியம் அல்லது வேறு சித்திரம் வரையப்பட்ட கண்ணாடி மீது ஓளியை பாய்ச்சுவதன் மூலம், திரையில் உருவத்தை தோன்ற வைக்கும் இந்த சாதனம், அக்காலத்தில் புதுமையானதாக மட்டும் அல்ல, ஈர்ப்பு மிக்க பொழுதுபோக்காக இருந்தது. ஹாலந்து விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹைகின்ஸ் (Christiaan Huygens ) இந்த சாதனத்தை கண்டுபிடித்தவராக அறியப்படுகிறார்.

 

அதற்கு முன் பிரபலமாக இருந்த காமிரா அப்ஸ்கியூரா (camera obscura.) சாதனத்தின் நீட்சியாக மாஜிக் லாண்டர்ன் சாதனைத்தை கருதலாம். காட்சி ஒன்று, துளை வழியாக செலுத்தப்படும் போது மறுமுனையில் சுவரில் தலைகீழ் வடிவில் தோன்றும் இயற்கை நிகழ்வை மையமாக கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்பட்டது. கொட்டகை, அறை இதற்காக பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் பெட்டி வடிவிலான சாதனமாக மாறியது. காட்சிகளை திரையில் தோன்றச்செய்யும் இத்தகைய முயற்சியின் தொடர்ச்சியாக, தொடர்ந்து பிராக்சினாஸ்கோப் (praxinoscope) உள்ளிட்ட சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வில்லியம் ஜார்ஜ் ஹோர்னர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஜிரோட்ரோப் (zoetrope) சாதனத்தின் மேம்பட்ட வடிவாக இது அமைந்திருந்தது. சுழலும் உருளை மீது வரிசையாக இடம்பெற்றிருந்த உருவங்களை கொண்டு, அசையும் படங்களாக பார்க்க இந்த சாதனம் வழி செய்தது.

 

இத்தகைய முயற்சி தொடர்ந்தாலும், இந்த சாதனங்களில் பலன் வரம்பு கொண்டதாகவே இருந்தது. 19 ம் நூற்றாண்டின் இறுதியில் எடிசன் உருவாக்கிய கைனடாஸ்கோப் (kinetoscope) இந்த நிலையை மாற்றியது. வில்லியம் டிக்சன் என்பவருடன் இணைந்து அவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 1890 ம் ஆண்டு டிக்சன், அசையும் படங்களை திரையில் தோன்றச்செய்யும் கைனடோகிராப் சாதனத்தை உருவாக்கினார். 1892 ல் எடிசன், கைனடாஸ்கோப்பை அறிமுகம் செய்தார். ஒளியின் பாதையில், புகைப்பட சுருளை மோட்டார் மூலம் சுழல வைத்த இந்த சாதனம், திரையில் அந்த உருவங்களை தோன்ற வைத்தது. இந்த சாதனம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கைனடாஸ்கோப் வழியே காட்சிகளை பார்த்து ரசிக்க பலரும் கட்டணம் செலுத்தவும் தயாராக இருந்தனர். இதன் காரணமாக, கைனடாஸ்கோப் மையங்கள் பல இடங்களில் உருவாகத் துவங்கி பெரிய அளவிலான வர்த்தகமாக உருவானது. எடிசன் நிறுவனம் இந்த வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது.

1894 ல் பிரான்சின் பாரீஸ் நகரில், கைனடாஸ்கோப் கொண்டு நடைபெற்ற கண்காட்சியை ஆண்டனி லூமியர் பார்வையிட்டார். இவரது புதல்வர்கள் தான் லூமியர் சகோதரர்கள். இந்த சாதனம் அவரை வெகுவாக கவர்ந்தது. ஏற்கனவே அவருக்கு புகைப்பட கலையில் ஆர்வம் இருந்தது. அதை தொழிலாகவும் செய்து வந்தார். கண்காட்சியில், திரையில் அசையும் படங்கள் தோன்றுவதை சகோதரர்கள் வெகுவாக ரசித்தாலும், இந்த சாதனம் வழியே ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கலாம் என்பதை ஒரு குறையாக நினைத்தார். ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்க கூடிய வகையில், திரையில் காட்சிகளை தோன்றச்செய்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தார். இந்த சிந்தனையுடன் வீடு திரும்பியவர், தனது புதல்வர்களிடம் இந்த யோசனையை கூறி, இதற்கான புதிய சாதனத்தை கண்டுபிடிக்குமாறு கூறினார்.

தந்தை சொல்வதை கேட்டு செயலில் இதற்கான ஆய்வில் இறங்கிய சகோதரர்கள், ஓராண்டு கடும் முயற்சியின் விளைவாக, சினிமாட்டோகிராப் சாதனத்தை கண்டுபிடித்தனர். 1895 ம் ஆண்டு அறிமுகமான சினிமாட்டோகிராப், காமிராவாக, காட்சிகளை பதிவு செய்யும் சாதனமாகவும், அவற்றை திரையில் தோன்றச்செய்யும் சாதனமாகவும் இருந்தது. இதன் பலனாக, திரையில் நகரும் படங்களை தோன்றச் செய்து, அதை ஒரே நேரத்தில் பலர் பார்த்து ரசிப்பதும் சாத்தியமானது. மேலும் இந்த சாதனம் எளிதாக எடுத்துச்செல்லக்கூடியதாகவும் இருந்தது.

 

புதிய காமிரா சாதனத்தை கையில் எடுத்துச்சென்று தினசரி வாழ்க்கை காட்சிகளை படம் பிடித்து, அதன் மூலம் உருவான பத்து சிறிய படங்களை லூமியர் சகோதரர்கள் திரையிட்டனர். தினமும் பார்க்கும் காட்சிகளின் தொகுப்பு தான் என்றாலும், இதை திரையில் பார்த்த மக்கள் பிரமித்தினர். அதிலும், ஒரு காட்சியில் ரெயில் தங்களை நோக்கி வருவதை பார்த்து மக்கள் மிரண்டு ஓடுவதும் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின.

முந்தைய பல கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக உண்டான, லூமியர் சகோதரர்களின் காமிராவில் இருந்து திரைப்படம் தோன்றியது. இதன் பிறகு, வெகுவேகமாக மாற்றங்களும், முன்னேற்றமும் உண்டாகி திரைப்படம் எனும் நுட்பம் ஒரு கலையாக வளர்ந்தது. புகைப்பட சுருளுக்கான அளவு மற்றும் வேகம் நிர்ணயிக்கப்பட்டது. காட்சியுடன் ஒலி இணைந்தது. திரையில் வரண ஜாலம் தோன்றியது. காட்சிகளை வெட்டி ஒட்டும் முறை கதை சொல்லலில் புதிய முறையை கொண்டு வந்தது. படங்களை பார்க்க திரையரங்குகள் தோன்றின. அவற்றை மையமாக கொண்டு தயாரிப்பு நிறுவனங்கள் தோன்றின. நட்சத்திரங்கள் உருவாயினர்.

மக்களுக்கு மிகவும் நெருக்கமான கலையான வளர்ச்சி அடைந்த திரைப்படம் தனித்தொழிலாக உருவெடுத்த நிலையில், தொலைக்காட்சியும், அதைத்தொடர்ந்து வீடியோ நுட்பமும் தனியே உருவாகி வளர்ச்சி அடைந்தன. வீடியோ நுட்பத்தின் வீச்சு திரைப்பட துறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்கலாம்.

இன்னும் பேசலாம்...

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction