free website hit counter

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 6 (We are Not Alone - Part - 6) - மீள்பதிவு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த தொடரில் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாக இருப்பது, வான் பௌதிகவியலில் (Astrophysics) எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பிலும், ஒரு நட்சத்திரத்தின் நிறமாலையில் (Spectrum) இருந்து உயிர் வாழ்க்கைக்கான தடயங்கள் எவ்வாறு அறியப் படுகின்றன மற்றும் வெளிப்புறக் கிரகங்களை நேரடியாகக் கண்டறிவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் பார்த்தோம்.

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -5 (We are Not Alone - Part -5) - மீள்பதிவு

அதன் தொடர்ச்சி இனி..

பாகம் 5 இன் இறுதியில் குறிப்பிடப் பட்ட இரு காரணங்களாலும், ஒரு வெளிப்புறக் கிரகத்தைப் படம் பிடிக்க மிகவும் பிரகாசமான தாய் நட்சத்திரத்தின் பெரும் பகுதியை மறைத்து அதன் கொரோனா (Corona) எனப்படும் மேற்புறத்தை மட்டும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய தேவை எழுகின்றது. இதன் மூலம் வெளிப்புறக் கிரகங்களைக் கண்டு பிடிக்க இன்று Starshade போன்ற அதி நவீன தொலைக் காட்டிகளில் Occulting disk எனப்படும் மறைக்கும் வட்டு பயன் படுத்தப் படுகின்றது.

VLT Telescope

VLT எனப்படும் வடக்கு சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் அமைந்துள்ள தொலைக் காட்டி மூலம் 2004 ஆமாண்டு முதன் முதலாக, 2M1207 என்ற தாய் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 2M1207b என்ற கிரகம் படம் பிடிக்கப் பட்டது.

2M1207b Exoplanet and Jupiter size comparison

சூரியனில் இருந்து நெப்டியூன் அமைந்துள்ள தூரத்தை விட அதிக தூரத்தில் அதாவது 55 AU (வானியல் அலகுகள்) தூரத்தில் இந்தக் கிரகம் தன் தாய் நட்சத்திரத்தில் இருந்து தொலைவாக அமைந்திருப்பதும், இதன் தாய் நட்சத்திரம் மிகவும் பிரகாசம் குறைந்த பழுப்பு நிறக் குள்ளன் (Brown Dwarf) வகையைச் சேர்ந்த நட்சத்திரமாக இருப்பதுமே இதைப் படம் பிடிக்க இலகுவாக இருந்ததற்குக் காரணங்களாகும்.

இனி ஒரு வெளிப்புறக் கிரகத்தின் இருப்பை அறிவதற்கு பயன் படுத்தப் பட்ட பாரம்பரிய (Traditional) முறைகளைப் பற்றியும், நாசாவின் The New worlds Mission என்ற செயற் திட்டத்தின் இலக்குகள் குறித்தும் பார்ப்போம். ஒரு வெளிப்புறக் கிரகத்தைப் படம் பிடிக்க இயலாத ஆனால் அதன் இருப்பை உறுதி செய்யக் கூடிய பாரம்பரிய முறைகள் இவையாகும்..

1.ஆஸ்ட்ரோமெட்ரி (Astrometry) -

தனது அருகே இருக்கும் கிரகத்தின் ஈர்ப்பினால் ஒரு நட்சத்திரத்தின் அசைவில் ஏற்படும் தாக்கத்தை (சலனத்தை) அறிதல்..

Doppler Effect

2.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வரும் நிறமாலையில் டொப்ளர் விளைவால் ஏற்படும் சிறு மாறுதல்களை அவதானித்தல் -

டொப்ளர் விளைவு என்பது ஒரு அலையின் (Wave) ஆதாரத்திற்குத் தக்கவாறு நகரும் நோக்குபவருக்காக அலையின் அதிர்வெண்ணில் (Frequency) ஏற்படும் மாற்றம் ஆகும். இந்த டாப்ளர் விளைவு தொடர்பான விளக்கத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..

3. கிரகண சமயத்தில் அல்லது ஒரு நட்சத்திரத்துக்கு குறுக்கே வெளிப்புறக் கிரகம் வரும் போது (transits) அந்தக் கிரகத்தால் தடுக்கப் படும் நட்சத்திர ஒளியில் ஏற்படும் மாற்றத்தை அவதானித்தல்

Pulsar Timing

4. பல்சார் நொடிகள் (Pulsar Timing) -

காந்தப் புலம் செறிந்த மிக வேகமாக சுழலும் நட்சத்திரம் (துடிவிண்மீன் - Pulsar) நிகழும் இடத்திலிருந்து வெளியேறும் மிகவும் செறிவான மின்காந்த அலையை குறிப்பிட்ட அந்த அரிதான தருணத்தில் அவதானித்தல் - Pulsar என்றால் என்ன என்பது குறித்த அறிமுகத்தையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..

 

Gravitational Lensing

 

5. ஈர்ப்புப் புல ஒளி வளைவு (Gravitational microlensing) -

ஒரு விண்மீன் அல்லது கேலக்ஸியில் இருந்து வரும் ஒளியானது வலிமையான ஈர்ப்புப் புலத்தால் வளைக்கப் படுவது பல்வேறு அவதானங்களுக்கு வழி வகுக்கின்றது. 1915 இல் அல்பேர்ட் ஐன்ஸ்டீனால் மும்மொழியப் பட்ட இந்த விளைவு நூற்றாண்டுகள் கடந்து அண்மைக் காலமாகத் தான் மிகவும் சக்தி வாய்ந்த தொலைக் காட்டிகளால் நிரூபிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



6. குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றும் வெளிப்புறக் கிரக சூழலில் இருந்து வரும் அகச்சிவப்புக் கதிர் வீச்சை (Infrared Radiation) அவதானித்தல்

இந்த வழிகள் யாவும் வெளிப்புறக் கிரகங்களின் இருப்புக் குறித்த மிக உறுதியான ஆதாரத்தைத் தந்தாலும், அவற்றின் திருத்தமான புகைப் படத்தைப் பெற உதவி புரியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

சரி, இனி நாம் NASA இன் The New Worlds Mission என்ற செயற்திட்டத்தின் இலக்குகள் எவையென்று பார்ப்போம்..

1. கண்டறிதல் (Detection) - Starshade போன்ற அதிநவீன தொலைக் காட்டிகள் அல்லது Occulters மூலம் நேரடியாக வெளிப்புறக் கிரகங்களது பொறிமுறை அல்லது இருப்பை கண்டறிதல்

2. கணணி மேப்பிங் (System Mapping) - தாய் நட்சத்திர ஒளியில் இருந்து கிரக ஒளியைப் பிரித்து அறிதல் மூலம் இயன்றளவு தெளிவான புகைப் படத்தைப் பெறுதல், குறித்த கிரகத்தின் ஒழுக்கை (Orbit) ஐ அறிதல், அதன் பிரகாசம், நிறமாலை மற்றும் உயிரியல் இயற்கையை அறிந்து பட்டியல் இடுதல் அடுத்த இலக்காகும்.

3. வெளிப்புறக் கிரகங்கள் குறித்த கல்வி (Planet Studies) - Spectroscopy முறை மூலம் குறித்த கிரகங்களின் வளிமண்டலம், மேற்பரப்பு குறித்த இரசாயன பகுப்பாய்வு, உயிரினங்கள் உள்ளனவா என்ற தேடல் மற்றும் photometry முறை மூலம் நிறமாலை பகுப்பாய்வு அதாவது, சமுத்திரங்கள், கண்டங்கள், துருவங்கள் மற்றும் முகில்கள் போன்ற கூறுகள் உள்ளனவா என அறிந்து தகவல்களைச் சேமித்தல்

4. வெளிப்புறக் கிரகம் ஒன்றின் மிகத் திருத்தமான புகைப்படம் (Planet imaging) - interferometry எனப்படும் மின்காந்தக் கதிர்கள் மற்றும் அலைகளைப் பயன்படுத்தும் ஒரு தொழிநுட்பம் மூலம் வெளிப்புறக் கிரகம் ஒன்றின் மிகத் திருத்தமான புகைப் படத்தை உருவாக்கலாம். Orbital inclination எனப்படும் ஒரு கிரகத்தின் ஒழுக்கின் சாய்வின் அடிப்படையில் கிட்டத்தட்ட 50% வீதம் தொடக்கம் 100% வீதம் வரையில் தத்துவார்த்தமாக (theoretically) கிரகத்தின் மேற்பரப்பை மேப்பிங்க் அல்லது இமேஜிங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. வெளிப்புறக் கிரகம் குறித்த மதிப்பீடு (Planetary assessment) - வெளிப்புறக் கிரகம் குறித்த ஆய்வில் இது இறுதிப் படியாகும்.
பூமியின் மேற்பரப்பில் நாம் எவ்வாறு ஆய்வு செய்து தகவல்களைப் பெறுகிறோமோ அதற்கு இணையாக வெளிப்புறக் கிரகம் ஒன்றில் இருந்தும் தகவல்களைத் திரட்டுவது இதன் அங்கமாகும். இப்போதைக்கு இதனை சாத்தியமாக்கக் கூடிய ஒரு தொலைக் காட்டி மிக மிகப் பெரிதாகவும், போதுமான ஒளியை உள்வாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டியதுடன் இந்த சமிக்ஞையைப் பெற பல சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் இது அமைவதும் முக்கியமாகும். ஆனால் இவ்வாறான ஒரு தொலைக் காட்டி எமக்கு ஒரு போதும் பொய்யான தகவல்களைத் தராது என்பது மட்டும் நிச்சயமாகும்.

இனி மனிதனைப் போன்ற அறிவுக் கூர்மை மிக்க வேற்றுக்கிரக உயிரினங்களைக் கண்டறிவது தொடர்பான தேடல் எவ்வாறு முன்னெடுக்கப் படுகின்றது என்ற அறிமுகத்தைப் பார்ப்போம்..

கடந்த நூற்றாண்டில் நவீன வானியல் ஆய்வுகள் தொடங்கியதில் இருந்து இன்று வரை எமது பிரபஞ்சத்தில் மனிதனுக்கு இணையான அறிவார்ந்த உயிரினங்களுக்கான (Intelligent Aliens) தேடல், பூமியைச் சுற்றி எல்லாத் திசைகளிலும், எல்லாக் கோணங்களிலும் இருந்து வரும் வானொலி அலைகளை (Radio Waves) இனை கண்டறிவது (Detection) மூலம் தான் கூடுதலாகக் கவனம் செலுத்தப் பட்டு (Focus) வருகின்றது.

கடந்த நூற்றாண்டுக்கும் இன்றைய காலத்துக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால் கணணி ரீதியிலான துல்லியமான மதிப்பீடு தன்மையின் வளர்ச்சியும், மிகவும் வினைத்திறன் மிக்க (Sensitive) தொலைக் காட்டிகளது உருவாக்கமும் தான். இதனால் தற்போது ஒளியியல் (Optical) ரீதியிலான மற்றும் அகச்சிவப்புக் கதிர்களது (Infrared Waves) அவதானமும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் புதிய தொழிநுட்பங்கள் மூலம் விண்ணில் தொழிநுட்ப தடப் பதிவுகள் (Technosignatures) ஏதும் உள்ளதா எனக் கூர்ந்து அவதானிக்கப் படுகின்றது.

இந்தத் தொழிநுட்பத் தடப்பதிவுகளில், மனிதனுக்கு இணையாக அல்லது மேம்பட்ட ஒரு மிகவும் முன்னேற்றமடைந்த நாகரிகத்தைக் கொண்டிருக்கக் கூடிய உயிரினங்கள் பின்வரும் விளைவுகளைத் தங்கள் தடங்களாகப் பதித்திருக்க முடியும். அவற்றில் முதன்மையானவை,

1. லேசர் ஒளிப்பதிவு (Laser pulses)
2. மாசுபடுத்தப் பட்ட வாயுக்கள் (Polluting gases)
3.அருகில் உள்ள நட்சத்திரம் ஒன்றின் சக்தியை ஆற்றலாகப் பெற்று செயற்படும் விதத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் பிரம்மாண்ட கட்டமைப்புக்கள் அல்லது குடியிருப்புக்கள்

கீழே இருக்கும் அட்டவணையில் (Graph) சுமார் 14 வெளிப்புறக் கிரகங்களது பொறிமுறையில் இருந்து வரும் மிகவும் நம்பகமான வானொலி அலை காட்டப் படுகின்றது. ஆனால் இதற்குக் காரணம் அறிவார்ந்த உயிரினங்கள் தான் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை

Radio Wave Technosignatures

எனினும் விண்வெளியில் பூமிக்கு ஒப்பான அதே கூறுகளைக் கொண்டு, உயிர் வாழ்க்கைக்கு 100% வீதம் நிச்சயம் அளிக்கும் 47 வெளிப்புறக் கிரகங்கள் இதுவரை அடையாளம் காணப் பட்டுள்ளன. இந்த வெளிப்புறக் கிரகங்களதுப் பட்டியல் மற்றும் விளக்க வரை படங்கள் குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

இனி வரும் தொடர்களில் பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் ப்ரொக்ஸிமா செண்டூரி நட்சத்திரத் தொகுதியில் அமைந்துள்ள உயிர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் Proxima Centuri b என்ற வெளிப்புறக் கிரகம் தொடர்பான உறுதியான தகவல்களை அதன் அருகேயே சென்று பெற மனிதனின் சாத்தியமான திட்டம் என்னவென்பது குறித்தும் பார்ப்போம்...

நன்றி, தகவல் - விக்கிபீடியா, நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction