சுமார் 7 வருடங்களுக்கு சூரியனைப் படிப்படியாக நெருங்கி ஆய்வு செய்யும் வண்ணம் 2018 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் சோலார் செய்மதி தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 15 மில்லியன் மைல் தொலைவில் நெருங்கி உள்ளது.
இது புதனை விட நெருங்கிய தொலைவாகும். 2025 ஆமாண்டு இது இன்னமும் சூரியனின் மையத்தில் இருந்து 4.3 மில்லியன் தொலைவுக்கு ஒளியின் வேகத்தின் 0.064% வீத வேகத்தில் நெருங்கிச் செல்லவுள்ளது.
அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தால் வடிவமைக்கப் பட்ட நாசாவின் பார்க்கெர் சோலார் செய்மதியின் தயாரிப்புச் செலவு அடங்கலாக இந்த செயற்திட்டத்துக்கான மொத்த செலவானது 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்காகோ பல்கலைக் கழகத்தில் அறிவியல் பீடத்தின் பேராசிரியரும், சூரியவியல் அறிஞருமான எயுகேனே பார்க்கெர் என்பவரின் பெயர் தான் இந்த விண்கலத்துக்கு சூட்டப் பட்டுள்ளது.
இந்த பார்க்கெர் சோலார் செய்மதியின் 3 முக்கிய இலக்குகள் என்னவென்று பார்ப்போம்.
1. சூரியனின் கொரோனா என்ற மையப் பகுதியை சூடாக்குவதுடன், சூரியப் புயலை ஆர்முடுகச் செய்து கொண்டிருக்கும் சக்தியின் பாய்ச்சல் பற்றி கண்காணித்தல்
2.சூரியக் காற்று அல்லது சூரியப் புயலில் வெளிப்படும் காந்தப் புலங்களின் கட்டமைப்பையும், இயக்கத்தையும் கண்டறிதல்.
3. சக்தி மிகுந்த மூலக்கூறுகளை ஆர்முடுகச் செய்தும் பயணிக்கச் செய்தும் கொண்டிருப்பதான பொறியியலைக் கண்டறிதல்