free website hit counter

திருவாதிரை (Betelgeuse) நட்சத்திரம் ஏன் ஒளி மழுங்கி வருகின்றது? : ஒரு பார்வை!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வானியல் கல்வியிலும், இந்து மத, சைவ மத நம்பிக்கைகளிலும் மிக முக்கியமான ஒரு நட்சத்திரம் திருவாதிரை! (Betelgeuse).

ஒரியன் வேட்டைக்காரன் எனப்படும் பூமியில் இருந்து பார்க்கையில் எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் தெரியக் கூடிய மிகப் பெரிய விண்மீன் தொகுதி ஒன்றின் தோளில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்று இந்தத் திருவாதிரை.

மிகப் பிரகாசமான இந்த நட்சத்திரம் சமீபத்திய தொலை நோக்குக் கருவிகளில் நோக்கும் போது பிரகாசம் குறைந்து வருவது அவதானிக்கப் பட்டதால் இந்தத் திருவாதிரை நட்சத்திரம் தனது வாழ்நாளை முடித்துக் கொண்டு ஒரு சூப்பர் நோவாவாக வெடிக்கப் போகின்றதா என்பது தொடர்பான செய்திகள் கடந்த மாதம் முதல் பல இணைய ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அது தொடர்பான ஒரு பார்வை இதோ.

8.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த சிவப்பு நட்சத்திரம் 2019 ஆமாண்டு ஜனவரியில் இருந்ததை விட 36% வீத பிரகாசத்தை இழந்திருப்பதால் அது விரைவில் ஊதிப் பெருத்து வருவதாகவும் இதனால் முன்பு எதிர்பார்க்கப் பட்டதை விட விரைவாகவே இது சூப்பர் நோவாவாக வெடிக்கும் என கலிபோர்னிய பல்கலைக் கழக விண்வெளி ஆய்வாளர் சரஃபினா நான்ஸ் தெரிவித்துள்ளார். பூமியில் இருந்து பார்க்கையில் மிகவும் பிரகாசமான நட்சத்திரம் சிரியஸ். இப்பட்டியலில் 10 ஆவது இடத்தில் இருந்த திருவாதிரை நட்சத்திரம் தான் இப்போது 24 ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.

724 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதால் இந்தத் திருவாதிரை நட்சத்திரம் சூப்பர் நோவாவாக வெடித்தாலும் அதனை உடனே நாம் காண முடியாது. எனவே தற்போது இந்த நட்சத்திரத்தின் பிரகாசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அது சூப்பர் நோவாவாக வெடிப்பதை எமது தலைமுறை பார்க்க முடியுமா என்பது ஐயமே என்றும் இதற்கு சில ஆண்டுகள் முதல் 500 அல்லது பல்லாயிரம் ஆண்டுகளும் எடுக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இது வெடிக்கும் போது அதைப் பூமியில் இருந்து பகல் வானிலே கூட அவதானிக்க முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனை விட அளவில் பெரிய சிவப்பு நட்சத்திரங்கள் தமது ஆயுள் முடிவில் ஊதிப் பெருத்து வெடித்து பின்னர் சுருங்கத் தொடங்குவதையே சூப்பர் நோவா (Super Nova) என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

திருவாதிரை நட்சத்திரம் சூரியனின் ஆரையை விட 720 மடங்கு பெரிது என்பதுடன் 15 மடங்கு அதிக நிறையும் உடையது. இந்தத் திருவாதிரை நட்சத்திரம் 724 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதால் இது சூப்பர் நோவாவாக வெடித்து வெளிப்படுத்தும் கதிரியக்க ஆற்றலின் வீரியம் பூமியைப் பாதிக்கும் அளவுக்கு இருக்காது என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இரவு வானில் இது நிலவை விடப் பிரகாசமாகத் தெரியும் என்றும், அதனல் பூமியில் புதிய நிழல் உருவாகும் என்றும் இது சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. எமது பூமியில் சூப்பர் நோவாக்கள் விண்வெளியில் நிகழும் பொழுது வெளிப்படும் மிகச் செறிவான நியூட்ரினோ கற்றைகளை வைத்து அவற்றை இனம் காண வசதியாக அண்டார்ட்டிக்கா மற்றும் ஜப்பான் போன்ற இடங்களில் நியூட்ரினோ ஆய்வகங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழகத்தில் உள்ள நியூட்ரினோ ஆய்வகம் பூமியில் ஏற்படும் அணுக்கசிவுகளை மாத்திரம் தான் கண்டறியக் கூடியது ஆகும்.

எமது இந்து சமயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் திரு என்று தொடங்கும் இரு நட்சத்திரங்கள் உள்ளன. அதில் ஒன்றான திருவாதிரை சிவனுக்கும், திருவோணம் விஷ்ணுவிற்கும் உரிய நட்சத்திரம் ஆகும். பொதுவாக இந்தியா உட்பட இந்து சமயத்தை அனுட்டிக்கும் நாடுகளில் சிவனுக்கு மிக உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகின்றது. மேலும் இந்த நட்சத்திரத்துக்கு உகந்த கிரகம் ராகு என்றும் கூறப்படுகின்றது.

பொதுவாக ஜோதிடத்தில் ஒரு நட்சத்திரம் ஆயுள் முடிந்து வெடிக்கும் தருணங்களில் பூமியில் போர்கள், அழிவுகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் என எதிர்வு கூறப்படுவது உண்டு. ஆனால் இவை யாவற்றுக்கும் விஞ்ஞான அடிப்படையிலான சான்று கிடையாது. தற்போது திருவாதிரை நட்சத்திரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தீவிரமாக அவதானிக்கப் பட்டு வருகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction