எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?
உண்மையில் இது குறித்த ஊகங்கள் நீண்ட காலத்துக்கு முன்பு அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கத்தோலிக்க விவிலிய விவரணத்தைத் தாண்டிய அபாரமான கற்பனை சக்தியாலும், உண்மையை அறியும் தாகத்தாலும் இத்தாலிய அறிஞர் கியோர்டானோ புருணோ என்பவரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே கண்டு பிடிக்கப் பட்டது.
அறிஞர் புருனோ பூமியின் இரவு வானத்தில் தெரியும் அனைத்து நட்சத்திரங்களும் ஒவ்வொரு சூரியனே என்றும் அவை ஒவ்வொன்றை சுற்றியும் கிரகங்கள் சூரியனைச் சுற்றி இருப்பது போன்றுள்ளது என்றும், இந்த நட்சத்திரங்களை உள்ளடக்கிய கோடிக் கணக்கான அண்டங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்றும் தனது கற்பனையில் எழுச்சி பெற்ற அறிவியல் தரிசனமாக கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இவரது விஞ்ஞானக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத ரோமானியர்களால் அக்கால வழக்கப் படி இவர் எரித்துக் கொல்லப் பட்டார் என்பது தனிக்கதை. ஆனால் நவீன யுகத்தில் முதன் முதலாக அவதான ஆதாரபூர்வமாக பால்வெளி அண்டத்தைத் தவிர எண்ணற்ற அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதை 1923 ஆமாண்டு எட்வின் ஹபிள் நிரூபித்தார். இவர் தொலைக் காட்டி மூலம் அவதானித்த சுருண்ட சுருளிகள் (Spiral nebulae)என்பவை விண்வெளித் தூசுக ள் அல்ல என்றும் இவை பால்வெளி அண்டத்துக்கு அப்பால் உள்ள புதிய வெளிப்புற அண்டங்கள் என்றும் அவர் விவரித்தார்.
இது 1990 ஆமாண்டு ஹபிள் தொலைக்காட்டி விண்ணில் ஏவப்பட்ட பின்னர் இன்று வரை மேற்கொள்ளப் பட்டு வரும் அவதானங்கள் மூலம் இது இன்னமும் நிரூபணமானது. இன்றைய நிலையில் நாசாவின் ஸ்பிட்சர் (Spitzer Space telescope) போன்ற நவீன விண் தொலைக் காட்டிகள் மூலமும், பூமியில் சிலியில் இருப்பது போன்ற பல அதிதிறன் ரேடியோ கதிர் வீச்சுத் தொலைக் காட்டிகள் மூலமும் பூமியில் இருந்து பல மில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவில் இருக்க கூடிய அண்டங்கள் குறித்தும், கிரகங்கள், பூமிக்கு ஒப்பான கிரகங்கள், கரும் துளைகள் மற்றும் சூப்பர் நோவாக்கள் போன்ற பல விண்வெளியின் கூறுகள் குறித்த தகவல்கள் திரட்டப் பட்டு வருகின்றன.
ஆனாலும் முதன் முறையாக ஆதாரத்துடன் பால்வெளி அண்டத்தைத் தவிர்த்து இன்னும் பல அண்டங்கள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானி எட்வின் ஹபிள் நிரூபித்ததால் தான் அவரது பெயர் நாசாவின் முதல் விண்வெளித் தொலைக் காட்டியான ஹபிளுக்கு இடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : Quora
- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்