பாஜக செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்
அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மேற்கு வங்கம், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதுமட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இச்சூழலில் இன்று பாஜக செயற்குழு கூட்டம் கூடியது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி முடிவுரை ஆற்றினார். அப்போது, பாஜக தொண்டர்களுக்கு அவர், "பாஜக எந்தவொரு குடும்பத்தையும் சுற்றி இல்லை. சேவை, உறுதி, சமர்ப்பணம் ஆகியவைதான் பாஜகவின் மதிப்பு. இந்தியாவை உலகமே பாராட்டுவதற்கு நான் காரணமல்ல. கட்சி தொண்டர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம்.
சேவைதான் உயர்ந்த வழிபாடு. சேவை செய்வதில் பாஜக தொண்டர்கள் புதிய கலாச்சாரத்தை காட்டி வருகின்றனர். சேவைதான் நம் நாட்டின் கடினமான காலங்களில் உதவியுள்ளது. பாஜக தொண்டர்கள் சாமானிய மக்களுடனான பாலமாக இருக்க வேண்டும். சாமானிய மக்களுடன் இருந்ததால்தான் இன்று நாம் இந்த இடத்தில் இருக்கிறோம்”
என்று சில அறிவுரைகளை வழங்கினார்.