சுவிற்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்த்தொற்றுகள் தொற்றுக்கள் தொடர்பில் " இவ்வளவு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (FOPH) இயக்குனர் அன்னே லெவி, சுவிற்சர்லாந்தில் இந்த நோயின் அலை மீண்டும் எழுந்திருப்பது குறித்து கவலைப்படுவதாகக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இது நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அது இவ்வளவு விரைவாக அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை", என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார். "தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை, எதிர்கால நிலைமையை மதிப்பிடுவது கடினமாகவுள்ளது " என்று அவர் மேலும் கூறினார்.
இது இவ்வாறிருக்க, கோவிட் - 19 தடுப்பூசி செயற்திட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், மேலும் அதனை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் பரப்புரைக்காகவும், மத்திய பொது சுகாதார அலுவலகம் (FOPH) இன்று பிற்பகல் 1:30 மணி முதல், தலைநகரிலுள்ள சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் அனைத்து வழிப்போக்கர்களுக்கும் கேக் வழங்கும். அத்துடன் அங்கு ஒரு நடமாடும் தடுப்பூசி ஈடும் அலகும் சேவையில் இருக்கும். தடுப்பூசி இட்டுக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள், முன்பதிவு செய்யாமல், அங்கேயே தடுப்பூசி ஒன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுவிற்சர்லாந்தின் இரண்டாம் தலைமுறை தமிழ் பிள்ளைகள் நெறிப்படுத்திய சூரிச் சிவன் கோவில் திருவிழா !
சுவிற்சர்லாந்தில் தடுப்பூசி திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாக, சுகாதார அலுவலகம் FOPH குறிப்பிட்டுள்ளது. 16 வயதிற்கு மேற்பட்ட மூன்று பேரில் இருவர் தடுப்பூசியின் முதல் மருந்தையாவது பெற்றுள்ளனர் என அதன் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.