சமூகத் தொடர்பாடல்களில் ஒரு முக்கிய பங்கினை வகித்த 'ஸ்கைப்' தளம், மே 5 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றிருக்கிறது. தொலைத் தொடர்பாடலில் ஒரு சகாப்தத்தின் முடிவு இது என வர்ணிக்கப்படுகிறது. 2003ம் ஆண்டு ஸ்கைப் தொடங்கப்பட்டதிலிருந்து, நேற்று (மே 5ந் திகதி ) வரை, அது உலகின் பலகோடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
கடந்த தசாப்தத்தில், ஃபேஸ்டைம், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சேவைகள், மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் அதன் பல வடிவமைப்பு செயற்பாடுகளுடன் போட்டியிட்டன.செய்தி அனுப்புதல், அழைப்புகள் மற்றும் வீடியோ அரட்டைகள் மூலம் நண்பர்களுடன் இணைவதை எளிதாக்கி, தொடர்பாடலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியதில் 'ஸ்கைப்' பின் பங்கு தனித்துவமானதும், தவிர்க்க முடியாததுமாகும்.
தூரதேசத் தொடர்பாடலில், பாவனையாளர்கள் முகம் பார்த்துப் பேசுவதற்கான முதல் தெரிவும் வாய்ப்புமாக இருந்தது 'ஸ்கைப்'. தொழில் முனைவோர் முதல், புலம்பெயர்ந்தோர் வரையிலான பல தரப்பு மக்களுக்கும் மிகப் பயனுள்ளதாக அமைந்த இந்த வாய்ப்புத் தளத்தை, 14 ஆண்டுகளின் முன்னதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதில் அதன் வணிக முக்கியத்துவம் தெரிந்தது. பின்னாளில் வந்த பல்வேறு தொலைத் தொடர்பு சேவைகளும், படிப்படியாக தங்கள் சேவைகளை 'ஸ்கைப்'பிற்கு இணையாக வளர்த்தெடுக்கத் தொடங்கின.
கோவிட்-19 பெருந் தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில், 'ஸ்கைப்'பின் சேவை அபரிமிதமானதாகவே இருந்தது. ஆனால் அதே காலப்பகுதியில் பெரிதும் அறியப்பட பல தொடர்பாடல் சேவைகளில், ஸ்கைப்பிற்கு பதிலாக ஜூமுக்கு மடைமாறினார்கள். இது படிப்படியாக அதிகரித்து, சமீபத்திய ஆண்டுகளின் பாவனைச் செயற்பாடுகள் ஸ்கைப்பை ஓய்வு பெறச் செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், ஸ்கைப்பை மூடிவிட்டு, அதன் நுகர்வோருக்கு மைக்ரோசாப்ட் டீம்ஸின் இலவச பதிப்பை வழங்குகிறது. இதனால் இதுவரையுள்ள ஸ்கைப் பயனர்கள் மைக்ரோசாப்ட் டீம்ஸ் பயன்பாட்டிற்கு இயல்பாக மாறுவார்கள். இதன் மூலம் அவர்களின் ஸ்கை மூலம் அவர்கள் நிகழ்த்திய உரையாடல்களின் செய்தி வரலாறு, குழு அரட்டைகள் மற்றும் தொடர்புகள் அனைத்தையும் மற்றொரு கணக்கை உருவாக்காமல் மைக்ரோசாப்ட் டீம்ஸில் தானாகவே கிடைக்கச் செய்யலாம் என்கிறார்கள். அதற்கான அறிவுறுத்தல்கள் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
நாம் வாழ்க்கைக் காலத்தில் உருவாகி, மறைந்துவிட்ட பல தொழில்நுட்பச் சாதனங்களும், பயன்னபாடுகளும் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி மனித உணர்வுகளின் வெளிப்பாட்டினை தொலைதூரம் தாங்கிச்சென்ற தொடர்பாடல் சாதனம். கணினித் திரையிலிருந்து சினிமாத் திரைவரையும் வியாபித்திருந்து , காதல் முதல் கண்ணீர் வரை மக்களின் அத்தனை உணர்வுகளையும் அனுபவித்துப் பகிர்ந்த வகையில், அதன் சேவை ஒய்வு என்பது மக்கள் சமூகத்தில் மதிப்புக்குரிய ஒன்றே. அதனாற்தான் இன்று பலரும், "ஸ்கைப் எங்கள் உறவின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது," எனத் துயருடன் நினைவு கூருகின்றார்கள். தொலைதூர உறவாடலில் ஸ்கைப்பின் 22 வருட காலம், ஒரு பொற்காலம் என்பது உண்மை. Good bye Skype