free website hit counter

வெற்றிக்கு வாழ்த்து !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று செப்ரெம்பர் 21ல்  நடைபெற்றது. நாடு முழுவதிலும் சராசரி 70 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பும், அமைதியாகவும் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணுதல் நேற்று மாலையே ஆரம்பித்திருந்தது.  

முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்ட போதிலேயே, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரான அனுர குமார திசாநாயக்க, அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

வாக்களிப்பு மையங்களில் பெறப்பட்ட வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்துஈ அதிகாலையில் இருந்து வெளிவரும் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அநுராவிற்குச் சாதகமாகவும், முன்னிலையிலுமே வைத்திருக்கிறது. அதேவேளை சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவும் அதிகரித்தே வருகிறது.  இதைவிட, இலங்கையின் தேர்தல் வெற்றிக் கணிப்பு முறையில் விருப்பு வாக்கு என்பதும் உண்டு.  ஆக அநுரா இறுதி வெற்றி பெறுவார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. ஆனாலும் அநுரா பெற்று வரும் இந்த வெற்றியை, வெற்றிக் காரணமானவர்களைப் பற்றி நாம் அவசியம் சிந்திக்க வேண்டும். கண்டிப்பாகப் பேசவேண்டும். 

அநுர குமார திசநாயக்க வெற்றிக்குரியவரா ? 

இத் தேர்தல் குறித்த எமது சென்றவாரப் பத்தியில், அந்நியசக்திகளும், பெருமுதலாளித்துவமும் கைகோர்த்து நிற்கும் பின்னணியோடு நடக்கும் தேர்தலில், வாக்கிருந்தும் எதிர்க்கும் வக்கற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை சமூகம் போன்றே, பெரும்பான்மைச் சிங்கள மக்களும் மாற்றப்பட்டநிலையில் நடைபெறும்  வக்கற்ற தேர்தல் எனக் குறிப்பிட்டிருந்தோம். ( வக்கற்ற தேர்தல் )அந்த வக்கற்ற மக்களின் திரட்சி, தேர்தலின் பின்னின்ற  பெருமுதலாளித்துவ, அந்நிய சக்திகள் அனைத்துக்கும் எதிரான மக்கள் தீர்ப்பாக அநுராவை முன்னிறுத்தியுள்ளது. "நாடு அநுரவோடு - රට්ට අනුරත්ත " என்ற தேர்தல் கோஷத்துடன் நின்ற அநுராவை முன்னிறுத்தியுள்ள சிங்களப் பெரும்பான்மை மக்கள் உலக அரசியலாளர்களுக்கும், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் சொல்லியிருக்கும் செய்தி பலமானது. இதில் படித்தவர்கள் பாமரர்கள் என்ற பேதமில்லாமல் ஒன்றினைந்திருந்தார்கள் என்பதனை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தெளிவுறச் சொன்னது.  குட்டை குழப்பி நிற்கும் தமிழ்த்தேசிய அரசியலாளர்களும்,  1971 ஏப்ரல் கிளர்ச்சிப் போராட்டங்கள் முதல், காலி முகப்போராட்டங்கள் வரை, இலங்கையில் இடதுசாரித்தலைமை  ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் பங்காளியாக இருந்த இந்தியாவிற்கும், அநுராவின் தெரிவின் மூலம் தெளிவான செய்தியைச் சிங்கள மக்கள் சொல்லியுள்ளார்கள். இதற்கும் மேலாக இலங்கையின் தேர்தல் முறையில், பெருமுதலாளித்துவச் சிந்தனை பின்னி வைத்திருக்கும் பொறிக்குள்ளிருந்தும்  அநுரா தப்பி வந்திருக்கின்றார். 50 வீத வாக்குகள் இல்லாமையால், இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு (  5,634,915 + 105,264 ) மொத்தம்  5,740,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வீத வாக்குகளைப் பெற்ற அநுரா இம்முறை தேர்தலில் வெற்றி காண்பது பாராட்டுக்குரியது.   அவர் தலைவராகப் பதவியேற்கும் பட்சத்தில், இலங்கையின் அரசியற்தலைமை பாரம்பரியம் மாறுபடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த நம்பிக்கை வலுப்பெற்றுத் தொடருமா என்பது பதவியேற்பின் போதே  தெரிந்துவிடும். அதற்குப் பின்னதாக அந்நிய அரசியற் பின்னணிகளையும், பெருமுதலாளித்துவ சக்திகளையும், எதிர் கொள்வது எப்படி? , ஊழலும், பொருளாதாரச் சீர்கேடும், மறைந்திருக்கும் பேரினவாதமும், நிறைந்துள்ள நாட்டினை எவ்வாறு வழிநடத்துவது ? என்பதெல்லாம் அவருக்கான மிகப்பெருஞ் சவால்கள். இவையெல்லாவற்றையும் அவர் எதிர்கொண்டு வெற்றி கண்டால் மட்டுமே அநுரா முழுமையான வெற்றிக்குரியவராவார்.

இலங்கையின் ஜனாதிபதியாக ஒரு தமிழர் வராமுடியாவிட்டாலும், தமிழர்களுக்கான உரிமை பேசும் குரலாக ஒன்றித்திருந்தால் முடியும் என்பதனையும், அதற்கு தமிழ் தலைவர்கள் தயாரில்லை என்னும் அவநம்பிக்கையையும்.  ஒருங்கே வெளிப்பதியிருக்கின்றார்கள் தமிழ்வாக்காளர்கள்.  இதன் மூலம் புலம்பெயர் தேசத்து தமிழ்ச்தேசிய அபிமானிகளுக்கும் தங்கள் தெளிவான விளக்கத்தைச் சொல்லியிருக்கின்றார்கள். 

இலங்கைத் தமிழ்மக்களைப் பொறுத்தவரை,  சந்திரிக்கா வெற்றி பெற்ற போது சமாதான தேவதையாகவும், பிரேமதாசா வென்றபோது நட்பாகவும், மஹிந்த வென்றபோது சாமான்யனது வெற்றியாகவும், ரணில் வென்றபோது படித்தவனின் வெற்றியாகவும், நம்பிக்கை கொண்டு ஏமாந்ததே  சிங்களத் தலைமைகளின் மீதான இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் நம்பிக்கை வரலாறு. இந்த ஏமாற்றத்தை இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட அநுரா தீர்த்து வைப்பாரா அல்லது அவரும் பேரினவாதத்துக்குள் மூழ்கிவிடுவாரா என்பது தமிழ்மக்களிடமுள்ள முக்கிய கேள்வி.

தேர்தலின் முடிவு வெற்றியாளராக அநுராவைச்  சுட்டினாலும், அந்நிய அரசியல் அதிகாரங்களும், பெருமுதலாளித்துவத்துவமும் கைகோர்த்து நின்ற தேர்தல் பின்னணியில், வக்கற்ற மக்களின் வாக்குகள் எத்தனை மாற்றம் தரவல்லது என்பதனை எல்லோருக்கும் எடுத் சொல்லியிருக்கும் மக்களின் வெற்றிக்கு  நாம் வாழ்த்துச் சொல்லலாம் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula