தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன மாநாடு, தமிழகத்தின் நேற்றைய தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
சினிமா சூட்டிங் போலிருந்தது என்றும், இரசிகப் பட்டாளங்களின் கூத்து என்றும், பல்வேறு விதங்களில் விமர்சிக்கப்பட்டாலும், த.வெ.க மாநாடு பேசுபொருளாகியிருக்கிறது. சில இடங்களில் அதிர்வினையும் தந்திருக்கிறது.
தமிழகத்துக்கு வெளியே இருந்து இம்மாநாடு குறித்த ஒரு அவதானிப்பாகப் பாரத்தவகையில், த.வெ.க விற்கு கிடைத்த முதல் வெற்றியாக இதனைக் கருதமுடிகிறது. அரசியல் மாநாடுகளுக்கு கூட்டம் திரள்வதென்பதும், திரட்டுவதென்பதும் தமிழகத்தின் வழக்க நடைடுறைதான். ஒரு நடிகராக இருந்து அரசியலுக்கு வரும் முதற்படியில், நடிகர் விஜயகாந்துக்குப் பின், நடிகர் விஜயின் அரசியற் பிரவேசத்துக்கான இந்த ஆரம்பம் அதிர்வலைகள் தோற்றுவித்தேயுள்ளன. இது நடிகர் விஜய்க்கு கிடைத்த வெற்றி. ஆனால் தமிழ வெற்றிக் கழகமும், அதன் தலைவராக விஜயும் இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வார்களா ? என்பது பெரும் கேள்வி.
தவெக வின் முதல் மாநாடு, அரங்கமைப்பிலிருந்து, விஜயின் பேச்சுவரை, ஒவ்வொன்றும் திட்டமிட்ட வகையில், பல்வேறு ஈர்ப்புக்களுக்கான நோக்கோடு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஆங்காங்கே சொதப்பல்களும் இருந்தன என்பதும் மறுப்பதற்கில்லை. மாநாட்டு வளாகத்துக்குள் வந்தபோது விஜயின் முகத்தில் இருந்த மலர்ச்சி, மேடையேறிய பின் முற்றாக மாறி பதற்றமுற்தாகவே திரையில் தெரிந்தது. அவர் அதனை இயல்பாக்கி இருக்க முற்பட்டபோதும் இறுதிவரை அது நீங்கவேயில்லை.
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரும்போது, அவர் திமுக எனும் பெரும் அரசியற்கட்சிலிருந்த அறிமுகத்துடனும், அரசியல் இயங்குதலுடனும் வந்திருந்தார். அதே அரசியற்பட்டறையிலிருந்து வந்த அரசியலாளர்களும் அவரோடு இருந்தார்கள். த.வெ.க மாநாட்டில் கமல்ஹாசனைப் போல மேடையில் தனியே நிற்காது, தன்னருகே சிலரை உடனிருத்தியிருந்தாலும், அந்த முகங்களைக் கமெராக்களும் சரி, அங்கு கூடியிருந்த ரசிகர்களும் சரி பெரிதும் கண்டு கொள்ளவேயில்லை. எப்போதும் விஜய் மட்டுமே எல்லாவிடங்களிலும் தெரிந்தார். என்னதான் கட் அவுட்டுக்களில் பெரியாரையும், அம்பேத்காரையும், காமராஜரையும், வைத்திருந்தாலும், பேச்சிலும் கொள்கைப் பிரகடனத்திலும், அவர்களது பெயர்களை உச்சரித்தாலும், த.வெக. மாநாடு விஜயின் பட சூட்டிங் போல தெரிந்ததற்கான காரணங்களில் அது முதன்மையானது.
விஜய் தன்னை ஒரு புதியபாணி அரசில்வாதியாக வெளிப்படுத்த முயன்றாலும், அவரது தோற்றம், உடல்மொழி, பேச்சு என எல்லாமும், விஜயை நடிகராகவே வெளிப்படுத்தியது. ஆனால் அதுதான் தன்னைச் சுற்றியுள்ள ரசிகளுக்கும் தொண்டர்களுக்குமான தொடர்பு என்பதையும் விஜய் உணர்ந்தே வைத்திருக்கின்றார். புரிதலும், தெளிவும் அற்றவர் எனச் சொல்லிவிட முடியாத வகையிலேயே தன் உரையின் உள்ளடக்கத்தை வைத்திருந்தார். எழுதிக்கொடுக்கப்பட்ட பேச்சு எனச் சொல்லப்பட்டாலும், உச்சஸ்தாயில் குரலை உயர்த்தி பேசும் அரசிய் பேச்சு வழக்கு நமக்கு தேவையில்லை எனச் சொல்லியவாறே, இஷ்டத்து நகர்ந்து பேசுவதை தனது பாணியாக வைத்திருந்த அதேவேளை தமிழக மக்களின் அதிருப்தி வெளிப்படும் இடங்களைச் சுட்டியும், தங்களைக்குறித்து சொல்லப்படுகின்ற அல்லது சொல்லப் போகின்ற கருத்துக்களைச் சொல்லி, அவற்றை எதிர்க்கிறோம் என்பதனையும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
எம்.ஜி.ஆருக்குப் பின் அரசியலுக்கு வந்த கமலஹாசன் வரையில் எந்தவொரு நடிகரும் தமிழக அரசியலில் சாதித்திட முடியவில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் நீண்ட செல்வாக்கு, வாக்கு வங்கி, என்பவற்றுக்கு முன்னால் எவராலும் இன்றுவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. த.வெ.க.வின் மாநாட்டிற்கு எட்டு இலட்சம் பேர் வரையில் திரண்டிருக்கலாம் என ஊடகங்கள் கணிப்பினை வெளியிட்டிருந்தாலும், தமிழகத்தின் வாக்கு வங்கியில் அது பெரும் தாக்கம் தரக் கூடிய எண்ணிக்கை எனச் சொல்லிவிட முடியாது. இந்த இரசிக எண்ணிக்கை வாக்கு விஜய்க்கு அரசியற்பிரவேசத்திற்கான ஆணையைக் கொடுக்கலாம். மாற்றத்தை விரும்புகின்ற மக்கள் கூடவும் வரலாம். ஆனால் அவை தொடர்வதற்கு, எதிர்காலத்தில் அதை நிலைநிறுத்துவதற்கு மிகப்பெரிய அரசியற்செயற்பாடுகளும், அதற்காக உடனுழைக்கும் தொண்டர்களும், கொண்ட அரசியலியக்கம் தேவை. அதுவே அவருக்கான தேர்தல் வாக்கு வங்கியை உருவாக்கும். இல்லை என்றால் கணிசமான ஒரு தேர்தல் வாக்கு வங்கியை பெற்றிருந்த விஜயகாந்தின் தேமு.தி.க பின் தளர்வுற்றதை உதாரணமாகக் கொள்ளலாம். அதற்கப்பாலும், தேர்தல் வெற்றிக்கான பிற வாக்கு வற்கிகளுடனான இணக்கமும் கூட்டும் கூடத்தேவை. தமிழக அரசியலில் மிக நீண்டகாலமாக அதை நுட்பமாகக் கையாண்ட அரசியற் தலைவர் கலைஞர். அவருகுப் பின் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. அதனைக் கைப்பற்றுவதற்கு விஜயின் இரசிக வட்டம் சாதகமாக இருந்தாலும், அந்த இரசிக வட்டத்தின் மனநிலையும், அறிவுநிலையும், அதனைச் சரிவரப்பெற்றுத் தருமா என்பதும் சிந்திக்க வேண்டியது.
இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான், விஜயை பேச்சின் துவக்கத்திலேயே தனது பாணியில் குழந்தையும், பாம்பும் குட்டிக்கதையை சொல்லித் தொடங்குகின்றார். குழந்தை பேதங்களற்று பாம்பைத் தொட்டு விளையாட விரும்பலாம், ஆனால் தீண்டாமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் பாம்பிடம் இருக்காதே. அதையும் தாண்டி விஜய் வெல்வாரா..?