நவம்பர் 14 ந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்துகான தேர்தல். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என எல்லோரும் சொல்லிக் கொள்கின்றார்கள். குறிப்பாகத் தமிழ்மக்கள் மத்தியில், சிங்கள மக்களைப் பாருங்கள், மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்மக்களும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற குரல்கள் எல்லா அதிகமாகவே கேட்கின்றன.
உண்மையில் சிங்கள மக்கள் மாறிவிட்டார்களா ? மறைந்த ஊடகவியாலளரும், அரசியல் ஆய்வாளருமான தாராக்கி சிவராம் தன்னுடைய பல பேச்சுக்களில் சிங்கள மக்களின் அரசியல் புரிதல் பற்றிக் குறிப்பிடுகையில், சிங்களப் புத்திஜீவிகள் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்களின் அரசியற் தேவைகள் உரிமைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தத் தவறியுள்ளார்கள் எனும் பலமான குற்றச்சாட்டினை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் அக்கருத்தினை மாற்றியமைத்தது போலத் தோற்றம் காட்டியிருக்கும். ஆனால் அது முற்றிலும் உண்மையானதல்ல.
அரசியல் அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மைச் சக்திகளும், அவர்களின் பின்னால் இருப்பவர்களிலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் வாழ்வாதார அடிப்படையில் பின்தங்கிய சிங்களக் கிராமிய மக்கள், பாராம்பரியமான அரசியற்கட்சிகளினால் தமது வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்ல என்ற புரிதலினால், ஏற்படுத்திய மாற்றமேஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட புதிய மாற்றம். அதன் வாக்கு வீதசாரங்களைப் பாரத்தால் பெரும்பான்மை சமூகத்தின் பாராம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கிகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பின்னால் நடைபெற்ற சி உள்ளூராட்சித் தேர்தல்களில் கூட பெரிய மாற்றங்கள் எதையும் காண முடியவில்லை. ஆனால் சிங்கள மக்கள் சிந்திகத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தச் சிந்தனை கிராமிய உழைக்கும் மக்களில் தொடங்கி, மெதுவாக பலதரப்புக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. இது தொடரவும் முடியும், துண்டிக்கப்படவும் கூடும்.
சிங்கமக்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பதைச் சரியாகக் கணித்து, JVP யை, NPP யாக மாற்றியதில் கிடைத்த வெற்றி ஜனாதிபதித் தேர்தல் வெற்றி. ஆனால் இந்த வெற்றியை ஒரு முழுமையான மாற்றமாகவோ, அமோக வெற்றியாகவோ NPP யால் ஏற்றுக்கொள்ளவோ பதிவு செய்யவோ முடியவில்லை. அதனால்தான் அவர்கள் திரும்பத்திரும்ப நமக்கு வாக்களிக்காதவர்களையும் நம் பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிச் செயற்படுகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஒரு நாடாளாவிய பரந்துபட்ட ஆதரவினை அடையாளப்படுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிக்கின்றார்கள். அதை நோக்கிய அவர்களது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். அதில் அவர்கள் வெற்றி பெறவும் கூடும்.
இந்த நிலையயில் தமிழ் அரசியல்வாதிகள் பிளவுபட்டு நின்றபதுடன், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதின்வழி, தமது இயலாமைகளை மட்டுமே வெளிப்படுத்தி நிற்கின்றார்கள். ஆனால் சிங்கள உழைக்கும் மக்கள் போலவே, தமிழ் மக்களில் உழைக்கும் மக்களாக இருப்பவர்கள் தங்களது வாக்குகளை சரியான வகையில் பிரயோகிக்கும் வகையறிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். அதன்வழியில் அவர்கள் தங்களுக்கான சரியான அரசியற் தலைவர்களை நிச்சயம் கண்டுகொள்ள வேண்டும்.