உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எடெல்வீஸ் இமயமலையில் இருந்து ஆஸ்ப்ஸ் மலைத் தொடருக்கு வந்தததாக நம்பப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் எடெல்வீஸ் சுவிற்சர்லாந்தின் ஒரு தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
லியோன்டோபோடியம் அல்பினம் எனும், தாவரவியற் பெயரைக் கொண்ட, எடெல்வீஸ் சுவிற்சர்லாந்தில் அஞ்சல் அட்டைகள் முதல் சாக்லேட் பார்கள், நாட்டுப்புற உடைகள் , லோஷன்கள், மற்றும் பேனா கத்திகள் முதல் பணப்பைகள் வரை அழகிய சின்னமாகப் பதியப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான வழக்குரைஞர் ஒருவர், தனது காதலிக்கு பரிசாக வெள்ளை பூவைப் பறிப்பதற்காக செங்குத்தான பாறையில் ஏறி தனது உயிரை ஆபத்தில் சிக்கியது முதலான பல செவிவழிக்கதைகள் எடெல்வீஸ் மலர்களுடன் தொடர்புடையதாக உள்ளது.
எடெல்வீஸ் மலரும் எங்களைப் போலவே காலவோட்டத்தில் ஆசியாவில் இருந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. அதன் தாய் வீடு இமயமலை மற்றும் சைபீரியாவின் உயர் பீடபூமியில் உள்ளது, அங்கு தற்போது காடுகளில் 30 சிறிய அறியப்பட்ட இனங்கள் உள்ளன. குவாட்டர்னரி பனி யுகங்களில் இந்த மலர் ஐரோப்பாவிற்கு குடியேறியது. இன்று இது சுவிற்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பால்கன் நாடுகளின் அல்பைன் பகுதியில் 1,500 முதல் 3,000 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.
90 களில் இருந்து Valais இல் பயிரிடப்பட்டு வருவதால், இனி இது ஒரு அழிந்து வரும் இனமாக கருதப்பட முடியாது எனினும், இம் மலரை நீங்கள் எங்கேனும் பறிக்கமுடியாது எனும் சட்டரீதியான பாதுகாப்புடனேயே வளரும் எல்லா நாடுகளிலும் இது பாதுகாக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் தேசிய அளவில் டிசினோ, கிராபுண்டன், வலாய்ஸ், வாட், ஃப்ரிபோர்க், பேர்ன், அப்பென்செல் மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து முழுவதும் "பனிகளின் நட்சத்திரம்" என அழைக்கப்படும் எடெல்வீஸ் மலர்கிறது.
இன்று ஆகஸ்ட் 1ம் நாள். எடெல்வீஸ் மலரும் கெல்வெத்தியாவின் தேசிய தினம். ஆசியாவிலிருந்து வந்த எடெல்வீஸ் மலருக்கும், எங்களுக்கும் வாழ்வு தந்த சுவிற்சர்லாந்து எனும் இந்தத் தேசத்திற்கும், தேசமக்களுக்கும் இனிய தேசிய தின வாழ்த்துக்கள்!