இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்றத் தேர்லின் பின்னாக, இனவாதம், தமிழ்தேசியம், குறித்த பல குரல்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றும் அவரவர் தேடல், தெளிவு, தெரிவு என்பவற்றின் விசாலப் பரப்பிற்கானவை.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற பின் சிங்களப்பகுதிகளில் வைக்கப்பட்ட பரவலானதும், சற்றுக் காட்டமானதுமான அரசியல் விமர்சனங்களில் தமிழ்மக்கள் மாறமாட்டார்கள். அதிலும் வடபுலத் தமிழ் மக்கள் மாறமாட்டார்கள் என்பது. ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தென்பகுதி எதிர்பார்த்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அப்படியானால் தமிழர்கள் மாறிவிட்டார்களா ? கிழக்குத் தமிழர்கள் இனவாதிகளா ? .இனவாதம் பேசுபவர்கள் தமிழர்களா ? என கேள்விகள் அடுத்துத் தொடர்கின்றன.
இனவாதம் என்பது தமிழ்மக்களிடம் இருந்து தோன்றியதான தெற்கின் கற்பிதம் முற்றிலும் பிழையான ஒரு பார்வை. அதேவேளை சிங்களர் எல்லோரும் பேரினவாதிகள் எனும் தமிழர்களின் கற்பிதமும் அதற்கு இணையானதே. அப்படியானால் இது எங்கிருந்து, எவ்வாறு தோன்றியதென்றால், இரண்டு தரப்பிலுமிருந்த ஆளுமைத் தரப்புக்களும், அவர்சார்ந்த அறிவுஜீவிகளும், மதவாதிகளுமே, இதன் தோற்றுவாய் என்பது வெளிப்படை. இந்த இனமுறுகலை, முரனை, தங்கள் நலனுக்காக, ஊதிப்பெருப்பித்து இலங்கை மக்களைப் பலியாக்கித் தமது நிலைகளை இலங்கை மண்ணில் ஸ்திரப்படுத்துவதில் குறியாகவிருந்தன பிராந்திய அரசுகள்.
இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் தேர்தல்களில், மக்கள் ஏற்படுத்தியிருக்கும், புதிய மாற்றம் , இனமுறுலைத் தோற்றுவிப்போருக்கும், அதை ஊக்குவித்து வளர்க்கும் பிற்போக்கு, மற்றும் பின்னரசியலாளர்களுக்கும், கொடுத்திருக்கும் நேர்மையான பதில். இலங்கையின் நகர்புறங்களை விட்டு விலகி, கிராமங்களை நோக்கி நகர்ந்தால், அங்குள்ள சிங்கள, தமிழ்மக்கள், மனிதாபிமானமிக்கவர்களாகவே உள்ளனர். பாவப்பட்ட இந்த மக்களின் பிள்ளைகளைத் தங்கள் அரசியல் லாபங்களுக்காக, இனவாதம்பேசி, உணர்ச்சியூட்டிப் பலியிட்டவர்களே இதுவரையில் இருந்த இலங்கையின் ஆட்சியாளர்கள். இதற்குப் பலியானவர்கள்தமிழமக்கள் மட்டுமல்ல சிங்களமக்களுமே. இந்தப் பலியிடல்கள் போதுமென்று விரும்புகின்ற மக்களின் ஒட்டுமொத்தத் தீர்ப்பே நடந்து முடிந்த தேர்தல்களின் பெறுபேறுகள்.
பொறுபேற்றிருக்கும் புதிய அரசுக்குப் பல சவால்கள் உள்ளன. நாடாளாவிய பொருளாதார முன்னேற்றம், இன முரண்களுக்கான தீர்வு, குற்றச்செயல்களுக்கான விசாரணை, பிராந்திய அரசுகளுடனான இணக்கம், சர்வதேச ரீதியான நம்பிக்கை பெறுதல் என்பன முக்கியமானவை. இவை எல்லாவற்றையும் வெற்றிகொள்வதென்பதும், சாத்தியமாக்குவதென்பதும், ஒரிரு நாட்களிலோ, மாதங்களிலோ, நடந்துவிடுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இவையெல்லாவற்றையும் சமகாலத்தில் முன்னகர்த்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. அவ்வாறான ஒரு பரவலானதும், பகிர்தலுமான வேலைத்திட்டமே மக்களின் நம்பிக்கையை மேலும் வலுக்கச்செய்யும். அதுவே இலங்கை மண்ணில் குழப்பங்களையும், இனவாதத்தினையும் தூண்டும் சக்திகளை வலுவிழக்கவும் செய்யும். புதிய அரசு அதற்கான வேலைத்திட்டங்களை நேர்த்தியாக முன்னெடுக்கும் எனும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது இன்றைய புதிய அமைச்சரவை.
பாராளுமன்றத்தில் 22 பெண்களின் பிரதிநிதித்துவம், மாற்றுத் திறனாளியின் பிரதிநிதித்துவம், மும்மொழிச் செயற்பாடு, அமைச்சுக்களில் புதிய முகங்கள் எனப் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது. “இலங்கையின் அரசியல் கலாச்சாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியலுக்கு இனி அதிகாரம் இல்லை என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக மையத்திற்கு கொண்டு வந்துள்ளது,” எனப் புதிய அரசின் பதவியேற்பில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க ஆற்றியுள்ள உரை அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
தென்கிழக்காசியப் பிரதேசத்தில் உள்ள இலங்கையெனும் சிறிய தீவின் மக்கள் இந்தச் சிந்தனை மாற்றம் ஒரு பொறி. அரசியல் சதுரங்கத்தில் சிதறடிக்கப்பட்டு, வீழ்த்தப்படும் மக்கள், தைரியமாகவும், நம்பிக்கையுடனும், வாக்களித்துப் புதிய மாற்றத்தைக் கோரியிருக்கின்றார்கள். மக்கள் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கும் புதிய மாற்றம் கிடைத்தால் ஒன்றுபட்டுத் தொடர்வார்கள். இல்லையேல் தோற்கடிப்பார்கள் என்பதை ஏனைய கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆளப் போகும் அரசுக்கும் அதையே சொல்லியிருக்கிறார்கள்.