free website hit counter

இனிமேலாயினும்....

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1971 ஆண்டு. "சேகுவேரா இயக்கம், அரசுக்கு எதிராக பொலிஸ்டேசன்களை எல்லாம் அடிச்சுப் பிடிக்குதாம் " என்றே 'ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி' தாக்குதல்களை, இலங்கையின்  தமிழ்ப்பகுதி மக்கள்  வர்ணித்துக் கதைத்தார்கள். வெகு வேகமாகப் பரவிய ஜேவிபியின் தாக்குதல்கள் தொடங்கிய வேகத்திலேயே இலங்கை அரசால் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.

ஜேவிபியின் அந்த முதல் முடக்கத்துக்குக் காரணம் பிராந்திய அரசியலின் ஆளுமைச் செல்வாக்கும், ஆயுதப்படை உதவிகளும் மட்டுமல்ல, அவர்களின் விசாலமற்ற, தற்சமூகப் பார்வையற்ற, நூல்வழிச் சித்தாந்தச் சிந்தனையுமாகும்.

இடதுசாரிப் பொதுவுடமைச் சிந்தனைகளுடனும், இளைய உத்வேகத்துடனும், தொடங்கப்பட்ட  இளைய எழுச்சி முறியடிக்கப்பட்டது. முன்னணியில் நின்ற இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.  பின் ஜேவிபியின் தலைவர் ரோஹணவிஜயவீரா சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறைக் கடற்கோட்டைக்குள் சிறைவைக்கப்பட்டிருந்தார் என்ற கதைகளும் பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்த அமைப்பிலிருந்து தப்பி ஓடிய இளைஞர்கள் பலரும், தமிழ்ப்பிரதேசங்களில் ஒளிந்திருந்ததும் உண்டு. தமிழ்ப்பிரதேசங்கள் பாதுகாப்பு நிறைந்த பிரதேசங்களாக எல்லோரும்நம்பிக்கை கொண்டிருந்த பொற்காலம் அது. 

அந்த நம்பிக்கையைச் சிதைத்தார்கள் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதிகள் எனக் காலங்காலமாகத் தமிழர்கள் உரத்த குரலில் சொல்லிக்கொண்டே வருகின்றார்கள்.  அது உண்மைதான் எனப்பலரும் உணர்ந்திருந்தாலும், அறிந்திருந்தாலும், வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை. முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர், பெரும்பாண்மைச் சிங்கள சமூகத்தைச் சார்ந்த ஒருவர், 'இனவாதப்பகை முரணால் நாடு சீரழிந்தது. அந்தச் சீரழிவுக்கு ஆட்சியாளர்கள் உதவினார்கள். இனங்களிடையே பகை முரண்களைத் தோற்றுவிக்க இருவேறு தரப்புக்களுக்குமே பொருளுதவி செய்தார்கள் ' என, ஒரு பொது வெளியில் வெளிப்படையாக உரத்துக் கூறியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதியை இப்போது தோழர். அநுர குமார திஸநாயக்கா என்று அழைக்க மனம் விரும்புகின்றது.  

71ல் உயிர்காப்பதற்காய் எங்கள் நிலங்களில் ஒளிந்து கொள்ள வந்த உங்கள் சகோதரர்களை எங்கள் தோழர்களாக, மனிதயநேய மான்புடன் காப்பாற்றியிருந்தோம். ஆனால் பின்னாளில் அந்த மனிதநேயத்தின் சிதறல்கள் எதுவும் எங்கள் மேல் சிந்தவேயில்லை. சிதறடிக்கப்பட்டோம். 

இழந்த உங்கள் தோழர்களின் நினைவுகளைப் போற்றுவதற்கு பெரும்பாண்மைச் சமூகத்தின் பிரதிநிதிகளான உங்களுக்கே 18 வருடக் காத்திருப்புத் தேவைப்பட்டது. அவர்களின் 36வது நினைவு மீட்பில், எங்கள் தீவை இனத்துவேசம் சின்னாபின்னமாக்கியது. அதைச் செய்தவர்கள் ஆட்சியாளர்கள் என்பதை வெளிப்படையாகப் பேசியுள்ளீர்கள். இம்முறை கார்த்திகையில், இனவாதத் தீயில் கருகிய அத்தனை உயிர்களையும் நினைவுகொள்வோம். அந்த நினைவேந்தல்களின் பின்,

இனிமேலாயினும்..

இனவாதம் எனும் கொடுஞ்செயலை, மதத் தலைவர்கள் முதல், பொதுமக்கள் வரை ஆதரிக்கவோ, ஆசீர்வதிக்கவோ முயலாதிருக்க வேண்டும் என்பதற்கான பேரழைப்பாக இருக்கட்டும் ஜனாதிபதி. தோழர் அநுர குமார திஸநாயக்காவின் இந்த உரத்த குரல்.

இனவாதம் எனும் கொடுஞ்செயலால், ஆட்சியாளர்கள் அழித்திருப்பது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை, உயிர்களை, மட்டுமல்ல. பெரும்பாண்மையின எளிய மக்களின் வாழ்வியலையும், போதை எனும் பெருங்குழிக்குள் புதைத்திருக்கின்றார்கள். அவர்கள் வித்திட்ட பேரினவாதத்தின் இன்றைய அறுவடையில் அழிந்து போவது சிங்கள மக்களின் வாழ்வியல் மட்டுமல்ல, அவர்கள் போற்றுகின்ற பௌத்த தர்மமும்தான் என்பதை உணர்த்துகின்றன இன்றைய தென்னிலங்கைத்  தெருக்களின் போதை.

இனிமேலாயினும்..

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula