free website hit counter

விதைக்கலாம்... 

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயற்கைப்பேரிடர் இலங்கை முழுவதையும் மொத்தமாகத் தாக்கியதில், இலங்கை மக்கள் மட்டுமன்றி, அரசும் அதிர்ச்சிக்கு உள்ளாகித்தான் போனது. ஆனாலும் அரச நிர்வாகம் வெகுவேகமாகப் புறச்சூழலுக்குத் தயாரானது. இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரும் பேரிடர்.

இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என திட்டமிடத் தொடங்குகையில், இந்திய அரசு, உடனடிநிவாரணத்திற்கான உணவுப்பொருட்களுடனும், மீட்புக்குழுவினருடனும் இலங்கையில் தரையிறங்கியதுடன், தொடர்ந்து அடுத்தகட்ட உதவிகளை தாராளமாகத் தருவிக்கவும் தொடங்கியது. இந்தியாவைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும், உதவிப்பொருட்களை வாரி வழங்கி வருகின்றன.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு "  எனும் வள்ளுவன் வாய்மொழிக்கொப்ப, உரிய நேரத்தில், உதவும் நண்பனாக, " சாகரபந்து" எனும் நடவடிக்கை மூலம் இலங்கைக்கு உதவ வந்தததின் பின்னால், பிராந்திய அரசியல் நலன் குறித்த சிந்தனை இல்லாமலும் இல்லை. ஆனால் அதனை யாரும் எதிர்பார்த்திரா வண்ணம் இலங்கை அரசு கையாள்கிறது. இந்திய அரசின் உதவிக்கான வரவு அனுமதி, உலக நாடுகளின் வருகைக்கான திறவுகோல் என்பதை இலங்கை அரசு நன்றாகவே புரிந்து செயற்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் உதவி கிடைக்காது என எதிர்கட்சிகள் காட்டிய பூச்சாண்டித்தனம் இதனால் காணமல் ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கைக்கான பேரிடர் உதவியில், பரஸ்பரம் தங்கள் பகை நிலைகடந்து ஒருங்கிணைந்து நிற்க, இலங்கை எதிர்கட்சிகள் மட்டும், அழிவின்போதும் அரசியல் செய்கின்றன. அதற்கான நேரம் இது இல்லை, இழப்பிலிருந்து எழுந்தபின்  அதனைச் செய்யலாம், இழப்பிலிருந்து மீள்வதற்கு இப்போது உதவ வாருங்கள் என வெளிப்படையாக ஜனாதிபதி அநுர அழைத்த போதும், ஒதுங்கிச் சென்ற எதிர்கட்சிகள், ஓரமாக நின்று ஏதேதோ செய்கின்றன.

" கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அரசைக் கவிழ்ப்போம் " எனச் சூழுரைத்திருந்த எதிர்கட்சிகளின் கூட்டுக்கு, இயற்கையே கொடுத்த சந்தர்ப்பமாக இந்தப் பேரிடர் வாய்த்திருந்தது. ஆனால் அதனை எவ்வாறு கையாளலாம் என எதிர்கட்சிகள் கூடிச் சிந்திப்பதற்குள்ளாகவே அரசு, நிவாரணப்பணிகளையும், பணிகளுக்கான நிதிகளையும், பெருமளவில் அறிவித்து முந்தியிருக்கிறது. மக்களும் முன்னெப்பொழுதும் இல்லாதவகையில் பேதங்கள் களைந்து, நிவாரணப்பணிகளில் இணைந்து வருகின்றார்கள் என்பதும் வெளிப்படை. ஆனாலும் ஆளுந்தரப்பான அநுர அரசின் அத்தனை அறிவிப்புக்களும் நடைமுறைச் சாத்தியமாகுமா ? எனும் பெரும் கேள்வியும் ஐயமும் எழாமல் இல்லை. அவ்வாறு எழுவதற்கான காரணங்கள் என்ன ? 

அரசின் மீதான எதிர்பினை செயலாக்க முனையும் வழிகள் எதுவும் இல்லாத போது, எதிர்தரப்பிலுள்ள இனவாத சக்திகள் எப்போதும் கையிலெடுப்பது இனத்துவேச செயற்பாடுகளையே. மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேத்தி அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான போக்கு, காலம் காலமாக பல நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் இழிநிலை அரசியல்தான். ஆனால் அதனை எந்தவித வெட்கமும் இல்லாமல் செய்வதுததான் அரசியலும், அறமும், பிழைத்தோரின் பெருந்துரோகம்.  அது மிக நீண்டகாலமாகத் தொடரும் தீவுதான் இலங்கை.

பேரிடருக்கு முன்னதாக, திருகோணமலையில், திட்டமிட்ட வகையில் ஒரு புதிய புத்தர் சிலை நிர்மாணத்தைத் தொடங்கி, அதனை இனத்துவேசமாகமாக மாற்றிட எதிர்கட்சிகள் முனைந்தது அனைவரும் அறிந்ததே. இனங்களிடையே உணர்வு முறுகல் நிலை தோற்றுவிக்க முயன்ற போது, அரசு அதனை இலாவகமாக அமைதிபெறச் செய்தது. அது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதை பெரும்பாண்மைச் சமூகமே உணரவும் பேசவும் தொடங்கியதில், அது அடங்கிப் போனது. அந்த வகையில் அது அரசுக்கு ஒரு முன்னகர்வு.

பேரிடர் வந்தபோது, அதனையொட்டி அரசியல் செய்ய முனைந்தன எதிர்க்கட்சிகள். பேரிடரின் தவறுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோஷமிட்டன. அரசுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அச்சமூட்டின. எதிர்கட்சிகள் வழக்குத் தொடர்வதை வரவேற்ற அரசு, அதன் மூலம் பேரிடர் குறித்த தவறுகள் விசாரிக்கப்படும், அதன் மூல காரணங்கள் ஆராயப்படும் என அறிவித்ததும் அதுதொடர்பான பேச்சுகளில் எதிர்கட்சிகள் அமைதிகாத்தன. ஆனால் அவை அடுத்து தங்கள் குரோத எண்ணங்களை அரச நிவாரணங்களின் பக்கம் திருப்பி, மக்கள் மத்தியில் குழப்பங்களைத் தோற்றுவிக்க முயலலாம். 

இவ்வாறான எண்ணத் தோன்றுவது எதனால் ? 

ஆரம்பகட்ட நிவாரணப் பணிகளில், அரச உயர்பீடமும், அதிகாரிகளும், அக்கறையாகவும், துரிதமாகவும் இருந்தபோதிலும், ஆங்காங்கே பிரதேச மட்டத்திலான செயன்முறைகளில் மந்தநிலையும், அலட்சியப் போக்கும் பல இடங்களில் காணப்படமை செய்திகளின் வழியாகவும், நேரடியான தொடர்புகளினூடும் அறியமுடிகிறது. பொக்குவரத்து, தொலைத்தொடர்பு என்பவற்றின் துண்டிப்புக்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அரசு இவற்றின் சீரமைப்புக்கான காலக்கெடுவினை விதித்து விரைந்து செயற்பட ஊக்குவிக்கிறது. தொடர்புகள் சீரானதும் சகல பிரதேசங்களிலும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படுகையில், மீண்டும் இந்த முரண்கள் தோன்றுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உண்டு. 

பெரும்பான்மைப்பலமுள்ள அரசாக இருந்த போதும், பிராந்திய உள்ளாட்சி அமைப்புக்களில்  அதன் ஸ்திரத் தன்மையின் தளர்வு, கீழ்மட்ட நிரவாக அடுக்குகளில் பலமான தளம்பல்களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. இந்தத் தளம்பல்களின் வழியே, உழல்களையும், வரம்புமீறல்களையும், இனத்துவேச பாரபட்சங்களையும், எதிர்க்கட்சிகள் ஏற்படுத்;தி குழப்ப நிலையினையும், அரசுக்கான அவப்பெயரினையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாவே உண்டு. பிரதேச அதிகாரிகளுக்கான அதிகாரங்களை விரிவுபடுத்தல் எனும் அரசின் நல்லெண்ண நோக்கின் வழியும் இதற்கான சந்தர்பங்கள் அதிகரிக்கலாம். இதை அரசு சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும்.  

போதைத் தடுப்பு, ஊழல்தடுப்பு, என்பவற்றை எவ்விதம் சட்டரீதியாக அரசு அனுகத் தொடங்கியதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் போன்று, பேரிடர் தடுப்பு, மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த விடயங்களில் சட்டரீதியான அனுகலை, அரசு பேணும் என்பதை வலியுறுத்த வேண்டும். அரச பணிகளில் தவறிழைப்பவர்கள் தண்டிகப்படுவார்கள் என்பது இறுக்கமாகப் பின்பற்றப்பட வேண்டும்.  அப்படியிருந்தால் மட்டுமே, நிவாரணப்பணிகளில் இனவாதப் போக்குகளைத் தவிர்க்க முடியும். 

பேரிடர் காரணமாக ஏற்பட்ட கழிவுகளை மூன்று வாரகாலத்துக்குள் அகற்றிட வேண்டுமென அரச கரும உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.  அதுபோன்றே இனவாதம் எனும் பெரும் பேரிடர் கழிவுகளையும் எல்லாத் தரப்புக்களிலுமிருந்து முற்றாக அகற்றுதற்கான முயற்சியினை அரசு முழுமனத்துடனும், திடத்துடனும்  மேற்கொள்ள வேண்டும் அதுவே அழிவிலிருந்து நாடு மீண்டு எழுவதற்கான நம்பிக்கையின் விதை. நம்பிக்கைகளை விதைக்கலாம்... 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula