free website hit counter

அமைதி கலைக்க வேண்டாம் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நல்லூர் கந்தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ இல்லையோ ?, வட இலங்கை மக்களை வசப்படுத்த, வழிபடுகின்றோமோ இல்லையோ,நல்லூர்க் கோவிலுக்கு ஒரு முறையேனும் போய்விட வேண்டும் என்பதில் தென் இலங்கை அரசியற் தலைவர்கள் யாவரும் அக்கறையாக இருந்தார்கள்.

வெளிநாட்டுத் தலைவர்கள் விரும்பிச் சென்ற தலமாகவும் இருந்தது. ஏனென்றால் வட இலங்கை மக்கள் மட்டுமன்றி தமிழர்கள் அனைவரது சைவ மரபுப்பண்பாட்டுத் தலமாகவும் அடையாளங் காணப்பட்டிருந்தது நல்லூர் கந்சுவாமி கோவிலும் அதன் சூழலும். 

யாழ்ப்பாணத்துச் சைவ மக்களுக்கோ நல்லூல் கந்தசுவாமி கோவில் என்பது வெறும் வழிபாட்டுத்தலம் மட்டுமன்றி, அவர்களின் நம்பிக்கை நிலம். கோவிலுக்குள்  போகின்றார்களோ இல்லையோ ? கோவில் திறந்திருக்கிறதோ பூட்டியிருக்கிறதோ ? எது பற்றியும் கவலையில்லை. நல்லூர் கோவிலுக்கு வெளியே நின்று கும்பிட்டுவிட்டு, கந்தனின் வீதியில், தேர்முட்டியடியில் , மரத்தடியில், என ஏதோ ஒரு இடத்தில், சற்று நேரம் இருந்துவிட்டுச் சென்றாலே, தங்கள் துன்பம் தொலைந்துவிடும் எனும் நம்பிக்கையோடு தினந்தோறும் நல்லூரான் நிலத்தை நாடி வருபவர்கள் இன்றளவும் உள்ளார்கள். நல்லூரான் நிலம் வெறும் கோவில் பூமி மட்டுமல்ல. யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள், கடையிற்சுவாமிகள் எனப் பல்வேறு சித்தர்களும், மகான்களும், நடைபயின்ற ஞானபூமி. 

விழாக்காலங்களில் மட்டுமன்றி, வருடத்தின் பல்வேறு நாட்களிலும் மரபார்ந்த கலைநிகழ்வுளும், இறைசிந்தனை நிகழ்வுகளும் நடைபெறும் நல்லூர் சூழல், சமயங்கடந்து, தமிழ்மக்களின் கலாச்சாரப் பண்பாட்டு நிலமாகவும் இருந்து வருகிறது. அது மட்டுமன்றி வரலாற்றின் பல்வேறு சம்பவங்களின் நிகழ் தளமாகவும், நினைவுகள் சுமந்த மண்ணாகவும், அமைதியும், ஆன்மீகமும் நிறைந்த பூமியாகவும் இருந்து வருகிறது. 

அத்தகைய பெருமைக்குரிய அறஞ்சார் சூழலில், அச் சூழலுக்கு மாறான பல்தேசிய அசைவ உணவுக் கூடத்தின் வருகையென்பது அறமற்ற செயல். உணவுப் பழக்கம் எனும் ஒற்றைச் சொல்லில் இதனைக் கடந்து சென்றுவிட முடியாது. ஏனென்றால் இது ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளம்.  உலகெங்கிலுமுள்ள பண்பாட்டுக் கலாச்சார அடையாளங்கள் சார்ந்த பகுதிகளில் அவற்றின் இயல்புக்கு பங்கம் விளைவிக்கின்ற செயல்கள் யாவும் தவிர்க்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு பாராம்பரிய அமைதிச் சூழலைக் குழப்பிவிடுகின்ற அவச்செயல் இது.

திட்டமிட்ட நிகழ்வோ ? அப்பகுதியை வட்டமிடச் செய்யும் செயலோ எதுவாயினும், சைவத் தமிழ்மக்களின் இறையுணர்வையும், நம்பிக்கையும், வழிபாட்டுச் சுதந்திரத்தையும், அவமதிக்கும் செயலாகும். தெரிந்தோ, தெரியாமலோ, எவ்வாறு செய்தாலும் அது கண்டனத்துக்குரிய செயலாகும். அனுமதி வழங்கப்பட்டிருந்தாலோ ? மறுகப்படிருந்தாலோ எதுவாயினும், இந்த வணிகம் அந்தப்பகுதியில் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும்.

இதை யார் மீறினாலும் அவர்கள் ஒரு ஆன்மீகபூமியின் அமைதியை, அறத்தைக் கலைத்தவர்கள் எனும் பழிக்கு ஆளாவார்கள். அறம் பிழைக்க வேண்டாம். அமைதி கலைக்க வேண்டாம் !

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula