யாழப்பாணத்தின் ஒரு கோவில் திருவிழாவாக மட்டுமல்லாது, யாழின் சமயக் கலாச்சார பண்பாட்டுவிழாவாக, உலகெங்கிலுமுள்ள தமிழர்களாலும், பிறநாட்டவர்களாலும் அடையாளங் காணப்படுமளவிற்குப் பிரபல்யம் பெற்றிருக்கும் நல்லூர் திருவிழா கோலாகலம் நிறைவு பெற்றிருக்கிறது.
சமூக ஊடகங்களின் வளர்ச்சி, அலைபேசிகளின் கமெரா தரமுயர்வு , என்பவற்றால் கைபேசிகளுடன் உயர்ந்த கணக்கிலடங்கா கரங்களுக்குள் கந்தன். "பல்லாயிரம் கைகள் மேல் எழுந்தன அவன் அழகை அலைபேசிகளுக்குள் அடக்கிவிட " எனத் தம்பி ஒருவன் வர்ணித்து மகிழ்ந்தான். அத்தனை பதிவுகளுக்கும் தன்னழகைச் சொரிந்த வண்ணம் சித்திரத்தேரேறி வந்தான் சிங்கார வேலன்.
அத்தனை பக்தியா அவன் மீது என்றால்; சத்தியமாக இல்லை. நல்லூருக்குப் போனோம் என்பது நமக்கோர் அடையாளம். போனவர் எல்லோர்க்கும், தீந்தமிழின் தேவாரம் முதல், திரும்பும் வழிக் கச்சான்வரை, அவரவர் தேடலின் விசாலத்திற்கேற்ப, ஏதோ ஒன்றைக் கொடுத்துவிடுகின்றான் விசாகன் என்பதில், அன்றிலிருந்து இன்று வரை ஏதும் மாற்றமில்லை. ஆனால் காலம் மாறியிருக்கிறது, காட்சிகளும் மாறியிருக்கிறது என்பதிலும் மாற்றமில்லை.
காட்சிகளின் வனப்புக்கேற்ப கந்தனும் வண்ணங்களில் காட்சி தந்தான். கதைகளின் சாயல்களில் காட்சியுமானான். வேற்படை வீரனாக, நல்லூரின் நாயகனாக, ஏதுமற்ற ஆண்டியாக, என எல்லாக் கதைகளின் காட்சிகளுடனும் கண்கவர்ந்து கலந்திருந்தான். கதைகளையும், புராணங்களையும், உரைகளாகவும், பிரசங்கங்களாகக் கேட்ட, படித்த, மரபு மாறிவருகிறது. காட்சியூடகம் உலகினைக் கையகப்படுத்து வருகின்ற காலமிதில் இந்தக் காட்சி அலங்காரங்களில் கதையுணர்த்தும் தேவையுமிருக்கிறதென்பது மறுப்பதற்கில்லை.
அவசியம் நாம் மறுக்க வேண்டிய சில காட்சிகளும், நல்லூர் சூழலில் அன்மித்த வருடங்களில் அதிகரித்து வருகின்றது. அவற்றில் முக்கியமானது பால்காவடி, பன்னீர்காவடி, தூக்குக் காவடி, என்றிருந்த காவடிகளின் கலாச்சாரப் பண்பு மாறி, வாள் காவடி என்பதுவரைக்கும் வந்து நிற்கிறது. அது அவரவர் தனி விருப்பு, வேண்டுதல் என்றாலும் கூட, எல்லாக் காட்சிகளையும் காட்டுகின்ற youtubers கூட, கிட்டக் காட்டினால் yellow content போட்டிடுவான் என அலறிய வண்ணம் கமெராவைத் திருப்புகின்ற அளவிற்கு அச்சம் தருகின்ற சாகச பக்தியெல்லாம் எதிர்காலத்தில் எமை எங்கு கொண்டு வந்து நிறுத்தும் என்பது, சமூக அக்கறை மிகுந்த அத்தனைபேரும் கவனங்கொள்ள வேண்டிய காட்சி மாற்றம்.
எல்லாத் திசை மாற்றங்களையும், எங்கள் கந்தன் காத்திடுவான் எனும் நம்பிக்கையுடன், மாம்பழத் திருவிழாவில் நல்லூரான் மாம்பழத்தை மட்டும் ஏலம் விட்டிருந்தால், இலங்கையின் மொத்தக் கடனையும் அடைத்திடும் அளவுக்குப் பணம் கொட்டியிருக்கும் என்ற நிலையில், " மாங்கன்றுகள் தருகின்றோம் பிள்ளைகளே, மரம் நட்டு, பராமரித்து நல்லூரனுக்கு மாங்கனிகள் தாருங்கள்! " என நாற்றங்கால்களை நாளைய சந்ததியிடம் கொடுத்த நல்ல காட்சிகளை, மாற்றத்தின் பெயரில் மனமிருத்தித் தேடிக் கொண்டாடிய வண்ணமாய் இருப்புவரை தேரிழுப்போம்.