free website hit counter

16 ஆண்டுகள் குரலற்றவர்களின் குரலாக...

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்புறவுகளுக்கு வணக்கம் !

இணையத்தின் வளர்ச்சியில், எழுதுவது இப்போது எல்லோர்க்கும் ஆகுமென்றாகிவிட்டது. இனியும் இணையத் தளம் நடத்துவது தேவைதானா ? என்ற கேள்வி எமக்கும் எழுந்திருக்கிறது.

"சமூக ஊடகங்களால் குரல்களைப் பெருக்கவும், இணைப்புகளை உருவாக்க முடியும், ஆனால்  அதைப் பொறுப்புடன் ஆராய்ந்து பயன்படுத்துவது முக்கியம்." என்கிறார் அமெரிக்க வழக்கறிஞரும், எழுத்தாளரும், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் மனைவியுமான, மிசெல்  ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama). அந்தப் பொறுப்பின் தேவை இப்போது அதிகமாகவே வேண்டியிருக்கிற நிலையில், சமுக அக்கறையுடன் எழுதுவதையும், எழுதுவோரை இணைத்துக்கொண்டு செயலாற்றுவதும்  எங்கள் பணியாகின்றது.

ஒரு புதிய புத்தகத்தை அதன் வாசனையை நுகர்ந்து தடவி, அட்டை போட்டு, அழகு பார்க்கும் சிறு பிள்ளை போலவே  இன்றும் 4தமிழ்மீடியாவுடனான எமது உறவும் செயலும் தொடர்கிறது. சலசலப்புக்கள் ஏதுமின்றி மெத்தனமாய் தொடரும் இந்தப் பயணத்தில் பதினாறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பது ஆச்சரியத்துடன் கூடிய அழகான சுகானுபவம்.

துரித உணவு (Fast food) கலாசாரத்தில், ருசியாக இருந்தால் போதும் போசாக்கு பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்பதே இன்றைய அவசர உலகின் நிலை. இன்றைய  ஊடகநிலையும் இவ்வாறானதே.  உண்மை எது? நியாயம் எது? என்பதெல்லாம் ஆராயப்படாமல், லைக், சேர், என்பதற்கான அவசரப் பதிப்புக்களாகவே  பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன.  

உலகமயமாக்கலோடு ஒட்டி உறவாடி வரும் நுகர்வுக் கலாச்சாரம், தனியுரிமை எனும் பெயரில், மனித மனங்களைத் தனித் தனித்தீவுகளாக்கியும், பழையன எனப் பண்பாட்டுப்பாரம்பரியங்களை வேகமாகச் சிதறடித்தும் வருகின்றது. இவற்றின் இழப்பில் நாம் இழந்துபோவது நம் வரலாற்றுத் தொன்மங்களை மட்டுமல்ல, மானுட நேசிப்பினையும் தான். 

இவ்வாறான நிலையில்  பொறுப்புணர்வோடும், நம் சமூக வரலாற்றின் தகமைதனை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையுடன் ஊடகத்துறையில் செயற்படவேண்டும். இந்தப்  பொறுப்புணர்ந்த  செயலில் நாம் தவறுவோமாயின், பிழையான வரலாற்றை எழுதி, தப்பான படிப்பினைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்து அவர்களை அழிப்பதற்கான ஆயத்தங்களை,   நாமே செய்கின்றோம் என்று பொருள். எமக்கு முன்னால் இருக்கின்ற படிப்பினைகளில் காணப்படும் தவறும், அதனால் நாம் பெற்ற இழப்பும் பெரிதானது. அதிலிருந்து மீள்வதென்பது ஒருநாளில் நிகழ்ந்துவிடும் அதி அற்புதமல்ல. அந்தக் கால நகர்வுக்கான காற்தட்ங்களை மெல்லப் பதிக்கின்றோம்.

சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடும், பொறுப்புணர்வோடும்,  நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது. எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .

ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். புதிய யோசனைகளைச் செயலாக்க முனைகின்றோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "குரலாக இருங்கள், எதிரொலியாக அல்ல." ("Be a voice, not an echo." - Albert Einstein) என்பார். அதையே மேலும் அழுத்தமாக, குரலற்றவர்களின் குரலாக இருக்கிறோம்  எனும், உணர்வுடனுடனும், உறுதியுடனும், உடன் வரும் உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் இறுகப்பற்றியவாறே இன்னுமொரு காலடியை எடுத்து வைக்கின்றோம்...


அனைவருக்குமான நன்றிகளுடனும், என்றும் மாறா இனிய அன்புடனும்
        - 4தமிழ்மீடியா குழுமத்தினர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula