இத்தாலிய இனிப்பு உணவு வகைகளில் முக்கியமானதும் பிரபலமானதும், திராமிசு (Tiramisu). இத்தாலிய விருந்துகளில் முக்கிய இடம்பெறும் 'திராமிசு' வார இறுதியில் முக்கிய தலைப்புச் செய்தியாகியுள்ளது.
காரணம் இந்த இனிப்பினைத் தோற்றுவித்த 'திராமிசுவின் தந்தை எனப் புகழப்பெறும், பிரபல சமையற்கலை வல்லுனர் அடோ காம்பியோல்' 93 வயதில் இத்தாலியில் காலமாகியுள்ளார்.
ஐரோப்பியர்களில் உணவுக் கலாச்சாரத்தில், பரிமாறுதலிலும், விருந்துபசாரங்களிலும் அதீத நாட்டம் மிக்கவர்கள் இத்தாலியர்கள். மணிக் கணக்கில் அமர்ந்து உண்ணும், ஐந்து அல்லது ஆறு தடவைகள் பரிமாறப்படும் பெருவிருந்துகள் முதல் சிறு விருந்துகள் வரையில், இறுதியாக வழங்கப்படும் இனிப்பு வகை உணவுகளில் வருவது 'திராமிசு'.
எஸ்பிரெசோவில் ஊறவைத்த பிஸ்கட்களை மஸ்கார்போனுடன் அடுக்கி, தூள் செய்யப்பட்ட கோகோவுடன் சேர்த்து தயாரிக்கப்படும் கிளாசிக் டிராமிசுக்கு இத்தாலியர்கள் மட்டுமன்றி, உலகம் பூராவும் உணவுப் பிரியர்கள் உண்டு. இவ்வாறு உலகப் புகழ்பெற்ற டிராமிசு இனிப்பின் "தந்தை" என்று அழைக்கப்படும் அடோ காம்பியோல், சென்ற வார இறுதியில் இறந்துவிட்டதாக வெனெட்டோ பிராந்தியத்தின் ஆளுநர் லூகோ ஜாயா அறிவித்துள்ளார். அவர் தனது செய்திக் குறிப்பில் "அடோ காம்பியோல், இன்று 93 வயதில் மறைந்ததால், வெனெட்டோவின் ட்ரெவிசோ அதன் மற்றொரு உணவுப'; படைப்பியல் நட்சத்திரத்தை இழக்கிறது " என்று சனிக்கிழமை சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.
ட்ரெவிசோ பேச்சுவழக்கில் "என்னை மேலே தூக்குங்கள்" என்று பொருள்படும் திரமிசு என்ற வார்த்தையைப் பெயராகக் கொண்ட 'திராமிசு' இனிப்பின் தோற்ற வரலாறும் சுவையான கதைதான். "டிராமிசுவின் தந்தை" என்று காம்பியோல் அழைக்கப்பட்டாலும், உண்மையில் அவரது மனைவி ஆல்பா தான், அதன் செய்முறையைக் கண்டுபிடித்தவர். அதைவிடச் சுவாரசியமானது, Le Beccherie உணவகத்தின் தற்போதைய உரிமையாளரான அவர்களின் மகன் கார்லோ கூறுவது. அவரது தாய் அவருக்குச் சொல்லும் போது இந்த உணவின் வடிவம் முற்றிலும் தற்செயலாக வந்ததாகக் கூறினார்.
கார்லோவின் தாயும், காம்பியோலின் மனைவியுமான ஆல்பா, அவர்களது உணவகத்தில் 1970களில் ஒருநாள் தமது சமையற்காரருடன், ட்ரெவிசோவில் பாரம்பரியமாக இருக்கும் சர்க்கரை மற்றும் காபியில் ஊறவைத்த பிஸ்கட்கள் கலந்த மஸ்கார்போனைப் பயன்படுத்திய போது, அதன் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தில் ' திராமிசு' பிறந்ததாகச் சொன்னார். ஆனாலும் இந்த இனிப்பு முதன்முதலில் 1972 இல் ரெவிசோ நகரில் உள்ள லு பெச்செரி உணவகத்தின் மெனுவில் சேர்க்கப்பட்டது.
கிளாசிக் டிராமிசு என்பது எஸ்பிரெசோவில் ஊறவைத்த பிஸ்கட்களை மஸ்கார்போனுடன் அடுக்கி, தூள் செய்யப்பட்ட கோகோவுடன் சேர்த்து தயாரிக்கப்படுவதாயினும், தற்போது இனிப்பு பழங்கள் முதல் வேர்க்கடலை வெண்ணெய் வரை எண்ணற்ற வகைகளிலும், வடிவங்களிலும் வருகிறது.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்