ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இன்றைய திகதியில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு திகதிகளில் இது கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளிலும் தாய்மையைப் போற்றும் கொண்டாட்டங்களாக இருந்த போதும், கொண்டாட்டங்களின் நீட்சியானது பெரிதும் வேறுபடுகின்றது. ஆயினும் இக் கொண்டாட்டங்களின் தொடக்கம், கிரேக்க, கத்தோலிக்க, இந்து, சமயங்களில் தாய்மையைப் போற்றும் நாளாக பன்னெடுங்காலத்திற்கு முன்னதாகவே இருந்து வந்துள்ளன.
பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது. கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது. கன்னி மேரியையும் "மாதா தேவாலய"த்தையும் கௌரவிக்க நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. உலகின் இந்து நாடான நேபாளத்தில், "மாதா தீர்த்த ஆயுன்ஷி" எனக் கொண்டாடப்பட்டது. இந்தத் திருவிழா வைகாசி அமாவாசை நாளில் வரும்.
தாய்மையைப் போற்றும் இந்தநாள், சமகாலத்தில் வணிக மயமாக்கப்பட்டுவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தாய்மையின் மேன்மையை பரிசுப் பொருட்களாலும், வாழ்த்து அட்டைகளாலும், மலர்க்கொத்துக்களாலும், ஈடுசெய்து விடமுடியாது எனும் விமர்சனக்குரல்கள் எழுந்து வருகின்ற போதிலும், உலகெங்கிலும், அன்னையர்தினக் குதுகலங்கள் அதிகரித்து வருவதாகவே சொல்லப்படுகிறது.
தாய்மை மகளிர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் !
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்