free website hit counter

இந்திய – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் - ஒரு பார்வை

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக பொருளாதார மாற்றங்களில் இந்தியாவின் மூலோபாயத் தேர்வு, பொருளியல் அவதானிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தற்போது பல அடுக்கான மாற்றக் கட்டத்தில் உள்ளது.உலகமயமாக்கலின் பாரம்பரிய வடிவம் மந்தமடைந்து, புவியியல் அரசியல், தொழில்நுட்ப பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் விநியோக சங்கிலி அரசியல் ஆகியவை வர்த்தக உறவுகளை மறுவரையறை செய்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அடையாளத்தைக் கடந்தும், ஒரு மாற்று உலக வளர்ச்சி மையமாக (Alternative Growth Pole) உருவெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய (EU) வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம், இருதரப்பு பொருளாதார நலன்களைத் தாண்டி, உலக பொருளாதார அரசியலில் ஒரு முக்கிய மூலோபாய நகர்வாகக் கருதப்பட வேண்டியதாகிறது. ஏற்கனவே எண்ணெய் வர்த்தகத்தில் இரஷ்யாவுடன் இந்தியா இணைந்து கொண்டதனால், அமெரிக்காவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை பின்னடைவுகளை, சமகாலத்தில் அமெரிக்காவால் உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட  குழப்பநிலைத் தருணத்தை சரியாகப் பயன்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்த்தின் மூலம் சமன் செய்திருக்கிறது.

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, இந்திய–EU வர்த்தக ஒப்பந்தத்தின் பொருளாதார விளைவுகள், சீனா–EU மற்றும் ASEAN–EU உறவுகளுடன் ஒப்பிட்ட பார்வையாகவும், மற்றும் இந்தியாவுக்கான நீண்டகால கொள்கை சவால்களையும் உள்ளடக்கிய  ஒரு பார்வையாக இது அமையும்.

இந்திய பொருளாதாரம்: அளவும் வேகமும்

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, அதன் அளவிலும், தொடர்ச்சியிலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.  சமீப கால மதிப்பீடுகளின்படியுள்ள முக்கிய குறியீடுகளின் பின்வருமாறு அமைகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) - 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்

ஆண்டு வளர்ச்சி விகிதம் - 6–7% ( இதனை உலக வங்கி 7.3 எனவும், இந்தியா 7.4 எனவும் சொல்லியிருப்பதாக ஞாபகம் )

உலக GDP தரவரிசை -    5‑வது இடம்

மக்கள் தொகை    1.4 பில்லியன் +

இந்த வளர்ச்சியில் சேவைத் துறை (55–60%), தொழில்துறை (25–27%) மற்றும் விவசாயம் (15–18%) ஆகியவை பங்காற்றுகின்றன. தகவல் தொழில்நுட்பம், மருந்துத் தொழில், வாகன உற்பத்தி, டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் இந்தியாவை உலக மதிப்புச் சங்கிலிகளில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக மாற்றியுள்ளன.

இந்திய – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உறவு: தற்போதைய நிலை

ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் முக்கிய வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டாளிகளில் ஒன்றாக உள்ளது.

இருதரப்பு வர்த்தக அளவு    120–130 பில்லியன் அமெரிக்க டாலர்

இந்திய ஏற்றுமதி -     மருந்து, IT சேவைகள், துணிநூல், பொறியியல் பொருட்கள் EU ஏற்றுமதி    இயந்திரங்கள், வாகனங்கள், ரசாயனங்கள்.

EU‑விலிருந்து FDI (கூட்டுத்தொகை)    - 90–100 பில்லியன் டாலர்

இந்த நிலை, இருதரப்பு உறவு வலுவாக இருப்பதை காட்டினாலும், சுங்க வரிகள், ஒழுங்குமுறை தடைகள் மற்றும் தரநிலைகள் காரணமாக முழுமையான வர்த்தக திறன் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.

வர்த்தக ஒப்பந்தத்தின் மூலோபாய முக்கியத்துவம்

இந்தியா – EU வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மூன்று அடுக்குகளில் விளங்குகிறது:

பொருளாதார அடுக்கு: சந்தை அணுகல், முதலீட்டு பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் மதிப்புச் சங்கிலி ஒருங்கிணைப்பு.

அரசியல் அடுக்கு: ஜனநாயக மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் இரு தரப்புகளுக்கிடையேயான நிறுவன ரீதியான கூட்டணி.

புவியியல் அரசியல் அடுக்கு: சீனாவுக்கு மாற்றான, நம்பகமான பொருளாதார கூட்டாளியை உருவாக்கும் முயற்சி.

ஒப்பீட்டு பார்வை: சீனா – EU, ASEAN – EU மற்றும் இந்தியா – EU

சீனா – EU உறவு வர்த்தக அளவு    800 பில்லியன் டாலர் +

தன்மை    - உயர்ந்த பொருளாதார சார்பு

தற்போதைய போக்கு - De‑risking, தொழில்நுட்ப கட்டுப்பாடுகள்

சீனா – EU உறவு அளவில் மிகப் பெரியதாக இருந்தாலும், அரசியல் பதற்றம் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு கவலைகள் காரணமாக அதன் எதிர்காலம் உறுதியற்றதாக உள்ளது.

ASEAN – EU உறவு வர்த்தக அளவு    300 பில்லியன் டாலர் +

பலம்    உற்பத்தி மையங்கள்

வரம்பு    குறைந்த உள்நாட்டு சந்தை அளவு

ASEAN நாடுகள் உற்பத்தித் துறையில் வலுவானவை. ஆனால் இந்தியாவைப் போல பெரும் உள்நாட்டு சந்தையும், தொழில்நுட்ப மனித வளமும் அவற்றில் இல்லை.

இந்தியா – EU: மூலோபாய வேறுபாடு

இந்தியா, பெரும் உள்நாட்டு சந்தை, ஜனநாயக நிறுவனங்கள், திறமையான மனித வளம், என்ற மூன்று அம்சங்களின் சேர்க்கையால், EU‑க்கு நீண்டகால மூலோபாய கூட்டாளியாக உருவெடுக்கக் கூடிய திறன் கொண்டது. 

இதனால் ஏற்படக்கூடிய இந்தியாவுக்கான பொருளாதார விளைவுகள்

ஏற்றுமதி விரிவு  – மருந்து, IT, பசுமை தொழில்நுட்பம்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) அதிகரிப்பு – உற்பத்தி மற்றும் R&D மையங்கள்.

தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை மேம்பாடு – உலக சந்தையில் இந்தியப் பொருட்களின் நம்பகத்தன்மை உயர்வு.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான விளைவுகள்

சீன சார்பிலிருந்து படிப்படியான விலகல்.

இந்திய சந்தை வழியாக நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு.

பசுமை மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை.

கொள்கை சவால்கள் மற்றும் விமர்சன பார்வை

இந்த ஒப்பந்தம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. விவசாயம், MSME துறை, அறிவுசார் சொத்துரிமை, சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் தரநிலைகள், உற்பத்தித் தரநிலை, போன்ற துறைகளில் இந்தியா கவனமாக சமநிலை பேண வேண்டியுள்ளது. குறிப்பாக, உற்பத்தித்தரம் எனும் நிலையில் சீன உற்பத்திப் பொருட்களின் குறைந்த விலை, சுமாரான உபயோகம் எனும் நிலையை, குறைந்த விலை, நிறைந்த தரம் எனும் கோட்பாட்டில், ஐரோப்பியச் சந்தையைக் கவருமாயின், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான பெரு வெற்றியாக அது அமையும்.  வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பு ஒன்றுக்கொன்று முரண்படாமல் இணைக்கப்படுவது கொள்கை நிர்ணயர்களின் முக்கிய சவாலாக இருக்கும்.

டாவோஸ் உலகப்பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், " இந்தியாவுடன் நாம் மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் உயர்நிலை. சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்று அழைக்கிறார்கள். இது  இரண்டு பில்லியன் மக்களின் சந்தையை உள்ளடக்கியது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏறக்கூறைய 25 வீதமான பங்கைக் கொண்டிருக்கும்," என்றார். 

அதே மன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன்  தனதுரையில், " ஐரோப்பிய ஒன்றியம் தனது இறையாண்மையைப் பாதுகாக்க “Trade Bazooka” எனும் பொருளாதார எதிர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்த தயங்காது" என்றார்.  அத்துடன் " இனி வர்த்தகம் ஒரு பரஸ்பர நன்மையை  ஏற்படுத்தும்  கருவி மட்டும் அல்ல, அதையும் தண்டிய   ஒரு அரசியல் பாதுகாப்பு ஆயுதம்  என்பதனை காலம் தெளிவுபடுத்தி உள்ளது" என்றார்.

இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியாவிற்குச் சென்று நேரடியாக மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தியக் குடியரசு தின நிகழ்வில் பேசும்போது,  "வெற்றிகரமான இந்தியா, உலகை மேலும் நிலையானதாகவும், வளமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது" என்று கூறியுள்ளர். இது இந்தியா மீது, ஐரோப்பியத் தலைவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்குச்  சான்றாகும்.

ஆக; இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கான ஒரு பொருளாதார வாய்ப்பாக மட்டுமல்ல; உலக பொருளாதார அமைப்பில் தனது இடத்தை மறு நிர்ணயம் செய்யும் ஒரு மூலோபாயத் தேர்வாகும். சீனா–EU மற்றும் ASEAN–EU உறவுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா–EU உறவு அளவிலும், தரத்திலும் வளரக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. ஆனால் அது இந்திய உள்ளக அரசியலிலும் சார்ந்திருக்கிறது என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது.

சரியான கொள்கை வடிவமைப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கு மற்றும் நீண்டகால மூலோபாய பார்வையுடன் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமானால், அது இந்திய பொருளாதார வளர்ச்சியிலும், உலக வர்த்தக அரசியலிலும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமையும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula