பெருமையுடள் அடையாளப்படுத்தக் கூடிய பல இளைய முகங்களில், அண்மைக்காலத்தில் பலரது கவனம் பெற்றிருக்கும் மூன்று இளையவர்கள் குறித்த ஒரு பார்வை இது. டிஷாதனா, வஜ்ரா, சத்யா, இந்த மூன்று இளையவர்களும் ஒவ்வொருவகையில் ஈழத்தின் மகள்களாக முகங்காட்டுகின்றார்கள்.
டிசாதனா : தமிழகத்து அகதி முகாம் ஒன்றிலிருந்து, தன் திறமையை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி, படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்டவள். இன்று விஜய் தொலைக்காட்சியின் 'சூப்பர்சிங்கர்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர். டிஷாதனாவின் பாடுந் திறமை படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு உயரிய நிலையை அடைந்திருக்கிறது.ஆனால் இங்கு குறிப்பிடுவதற்கான சிறப்பு அதுவல்ல.

சிலவாரங்களின் முன்னதாக இறுதிப்போட்டியாளர் தெரிவுக்காக அவள், பின்னணிப்பாடகி சுவர்ணலதா பாடிய பாடலை மிக உருக்கமாகப் பாடிய போது அரங்கமே மெய்மறந்து இரசித்தது. நடுவர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் டிஷாதனாவை தன்னிச்சையாகவே வெற்றியாளர் ஆசனத்தில் அழைத்துச் சென்று அமரவைத்தார். ஆனால் டிஷாதனா அதனை ஏற்றுக் கொள்வதில் தயங்கினாள். ஏனைய நடுவர்கள் அந்த முடிவினை ஏற்றுக் கொண்டபின்னும், அவளது தெரிவை முழுமையாக அங்கீகரித்த பின்னும், சக போட்டியாளர்களின் திறமையை முன்னிறுத்திய அவளது தயக்கம்,மனித மாண்புக்குரியது. அவளது அந்தச் சிறப்பினை இயக்குனர் மிஷ்கினும், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரியும், வெளிப்படையாக மனந்திறந்து பாராட்டினார்கள். உண்மையில் அவளது அந்த உயர்வான பணிவும், பண்பும் ஒரு ஈழத்து முகமாக ஜொலிக்க வைத்தது. அதுவே டிஷாதனாவை இன்னும் பல உச்சங்களுக்கு அழைத்துச் செல்லும்.

வர்ஜா: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது நடைபெறும் 'சரிகமப' வின் சிறுவர் நிகழ்ச்சியில், வலுவான போட்டியாளராகவும், அழகான குரலுக்கும், தமிழ் உச்சரிப்புக்கும் சொந்தக்காரியாகக் களமிறங்கிருப்பவள் வர்ஜா. திருகோணமலையில் மகாவலி நதிக்கரைக் கிராமமொன்றிலிருந்து வந்திருக்கும் வர்ஜாவின், இசைஞானம் அபாரம். அதேபோல் அவளது தமிழ் ஈடுபாடும் குறிப்பிடத்தக்கதாயுள்ளது. இவை இரண்டுக்கும் நல்ல உதாரணமாக அமைந்தது, அவளது இந்தவார ஆற்றுகை வெளிப்பாடு. இந்த நிகழ்ச்சிக்காக அவள் தோன்றிய ஓளவையின் வேடமும், அதற்குத் தேவையான காட்சியமைப்பும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. டிசாதனாவிடம் காணப்பெற்ற, அதே பணிவும், பண்பும், இசைத்திறமையும், தமிழ்த்தகமையும், வர்ஜாவிடமும் வெளிப்படுகையில் ஈழத்தின் இன்னுமொரு இளைய முகமாத் தெரிகின்றாள்.

சத்யாதேவி: இந்த மாதம் இந்தியாவிலும் , ஓ.டி.டி தளத்திலும் வெளியாகியுள்ள 'சல்லியர்கள் ' பட நாயகியான சத்யாதேவி, தமிழகத்தைச் சேர்ந்தவராயினும், அவர் சல்லியர்கள் படத்தில் ஏற்றுக்கொண்ட நந்தினி பாத்திரத்தின் ஊடாக ஒரு ஈழத்துமகளாகத் தெரிகிறார். அறியப்பட்ட நடிகரான கருணாசுடன் ஏனையோரும் இயல்பாக நடித்திருந்தாலும், தமிழகக் கலைஞர்களாவே மனதில் பதிகின்றார்கள். கதைநாயகியான சத்தியாதேவி ஒரு நேர்காணலில், ஈழத்து பேச்சுவழக்கு மொழியில் தன்னால் உரையாடமற் போனது தனக்கு வருத்தமாக உள்ளது எனத் தெரிவித்திருப்பார். ஆனாலும் படத்தில் அவரது பாத்திரத்திறக்கான நடிப்பும், உடல்மொழியும், கண்களில் காட்டும் சோகங் கலந்த உறுதி, என்பனவற்றால் அவரை ஒப்பனைகள் தாண்டிய ஒரு ஈழத்து முகமாகக் காணமுடிகிறது. சத்யாதேவியின் தத்துரூபமான இந்த ஒன்றுதலும் ஆற்றுகையும், அவருக்கு மேலும் பல முயற்சிகளின் தொடக்கமாக அமைய வேண்டும்.
டிசாதனா, வர்ஜா, சத்தியா, இந்த மூவரும், திறமையால், பணிவால், பண்பினால், நம்பிக்கை தரும் முகங்களாகத் தெரிகின்றார்கள்.
-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்
