தொடுதிரை தொலைபேசிகள்(smartphone) வருகை என்பது மக்கள் சமூகத்தின் வாழ்வியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. நன்மை, தீமை, எனப் பல்வகைத் தாக்கங்கள் இருந்த போதும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் தொடுதிரை தொலைபேசிப் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து உள்ளது.
அது ஒரு போதை போல் படர்வதாகவும், ஆய்வுகள் சில தெரிவித்துள்ளன. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடத்தில் இப் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும், பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பாவனைத் தடைகளை விதித்து வருகின்றன.
இளையவர்களை திரை போதையிலிருந்து பாதுகாக்க இவ்வாறான தடைகள் போதுமானதா ?
குழந்தைகள் வளர்ந்து இளைஞர்களாக மாறுகின்ற நிலையில், அவர்களது திரைப்பாவனை நேரம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள், என விரிவாக்கம் பெறுகின்றன. இதேவேளை கணினி முதலானவற்றின் திரைப்பாவனை கட்டாய பயன்பாடாகவும் உள்ளன. அந்த வகையில் உலகளவில் இளைஞர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7 மணித்தியாலங்களுக்கு அதிகமா திரைகளுக்கு முன்னால் செலவிடுகின்றார்கள் என்கின்றன ஆய்வுகள்.
3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அதிகளவிலான திரைப்பாவனை அவர்களின் மூளை வளர்ச்சியை, கண்பார்வையை, எதிர்மறையாக பாதிக்கலாம் என்றும், 9 முதல் 11 வயதுடையவர்களின் அதீத திரைப் பாவனை தற்கொலை முதலான அபாயத்தை அதிகரிக்கலாம் என்கின்றார்கள். இவற்றிலிருந்து சிறார்களையும் இளையவர்களையும் பாதுகாக்க, அவர்களின் கவனத்தை, இசை, நடனம், என்பனவற்றை நோக்கி திருப்பும் முயற்சிகள் நடைமுறையில் பலன் தரும்.
சிறார்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுக்கு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் குடும்பங்கள் உட்பட மற்றும் பலரும் சரியான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க முயற்சித்து வருகின்றார்கள். இது தொடர்பான கையேடுகளும், புத்தங்களும் கூட வெளிவந்திருக்கின்றன.
சிறுவர்கள் கைகளிலிருந்து தொடுதிரைக் கைப்பேசிகளை தவிர்பதற்கு, அவர்களது கவனங்களைப் பல்வேறு விளையாட்டுகளிலும், செயல்முறைகளையம் நோக்கித் திருப்புதல் நல்லது. வெளியிடங்களில் விளையாடும் பயிற்சிகள், விளையாட்டுக்கள், நடைப்பயிற்சிகள், உட்புறங்களில் விளையாடக் கூடிய சதுரங்கம் முதலான விளையாட்டுக்கள், அதே போல், இசை, நடனம், ஒவியம், புத்தக வாசிப்பு, கைவினையாக்கம், என்பவற்றிலான பயிற்சிகள், பயிர்வளர்ப்பு, வளர்ப்பு பிராணிகளுடனான நெருக்கம்,உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை தரும். இது தவிர சிறுவர்கள் வெளியே விளையாட்டுக்கும், பயிற்சிகளுக்கும், சென்று வருகையில் சமூக இயங்கியலுடன் இணங்கிப் போகும் பழக்கமும் பிள்ளைகளுக்கு அதிகரிக்கும்.
இவை தவிர, பிள்ளைகள் முன்னால் முடிந்தளவிற்கு பெரியவர்கள் தொடுதிரைச் சாதனங்களை பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்வது அல்லது குறைத்துக் கொள்வதும் முக்கியமானது. இது நடைமுறைச் சிரமம் தருவதாக இருப்பினும், சிறார்களின் எதிர்கால நலன்களில் தொடுதிரைத் தொலைபேசிகளின் போதை ஏற்படுத்தக் கூடிய எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து இயங்குவது முக்கியமானது.