முயலும் ஆமையும் எனும் சிறுபராய கதைசொல்லிகள் வழி ஆமை ஒரு வேகம் குறைந்த பிராணி என்றே அறியத்தொடங்கியிருக்கிறோம். ஆனால் பூமியில் உயிரினங்களான டைனோசர் தோன்றிய காலத்திலிருந்து எம்மோடு இன்று வரை ஆமைகள் வாழ்ந்து வருகின்றது என்றால் அதிவேகம் அவசியம்தானா ?
ஒவ்வொரு ஆண்டும் மே 23 ஆம் திகதியை உலக ஆமைகள் தினமாக கொண்டாடிவருகின்றனர். ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இத்தினம் கொண்டுவரப்பட்டது. விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் எனும் தம்பதியினர் முதன்முறையாக உலக ஆமைகள் தினத்தை தோற்றுவித்தனர்.
அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சேர்ந்த இவர்கள் 1990 ஆண்டு இத்தினத்தை தோற்றுவித்தாலும் 2000 ஆண்டிலிருந்து கொண்டாடிவருகின்றனர். ஆமைகளை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த அமைப்பானது இதுவரை 3000 ஆமைகளை பராமரிப்பு இல்லங்களில் சேர்த்திருப்பது குறிப்பிடதக்கது.
ஆமைகள் பொதுவாக நீரிலும் நிலத்திலும் வாழக்ககூடிய உயிரினம், கடல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முக்கிய பெரும் பொறுப்பில் கடல் ஆமைகள் செயல்படுகின்றன. அவை மெல்ல மெல்ல நகர்ந்தாலும் கடலை சுத்தமாக்குகின்றன.
ஆசிய கண்டத்தில் மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என பலவகை ஆமைகள் உள்ளன. இதைத்தவிர உலகம் முழுவதும் ஆமை இனங்கள் மொத்தம் 356 இருப்பதாக அறியப்படுகிறது. மேலும் இவை சுராசிக் இடைக்காலம் முதலே இருந்துவருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆமையினம் பேராமை. இவை 200 செ.மீ (6.6 அடி) நீளம் வரையும் 900 கிலோ கிராம் எடை வரையும் வளரும். உலகின் சிறிய ஆமையான செர்சோபியசு சிக்னேட்டசு எனும் ஆமை தோராயமாக 8 செ.மீ (3.1 அங்) நீளமும் 140 கிராம் எடையும் இருக்குமாம்.
ஆமைகள் நீர்வாழ் தாவரங்களையே உணவாக உண்ணுவதோடு, சிறியவகை பூச்சிகள், நத்தைகள், புழுக்களையும் உண்ணுகின்றன.
ஆமைகள் மணிக்கு மூன்று மைல் வேகத்தில் செல்லக்கூடியவை என்றாலும் 300 ஆண்டுகள் வாழக்கூடியவை. சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுறா, திமிலங்கலத்தின் இரையாவதும் மீனவர் வலையில் சிக்குவதும்தான் கவலைக்குரியது. மேலும் கடல் மாசு காரணங்களாலும் கடல் ஆமைகளுக்கு ஆபத்து அதிகரித்துவருகிறது.
கடல் ஆமைகள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வருகின்றன. கடந்தாண்டு இவ்வாறு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகள் செயற்கை பொறிப்பகத்தில் வைத்து குஞ்சு பொறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் வெகுவாக குறைந்தது, இதனால் கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும் குறைந்து கடல் சுற்றுசூழல் தூய்மையானது. இதனையடுத்து மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஆகவே ஆமைகள் இனத்தை பாதுகாக்கவும், இனப்பெருக்க காலத்தில் தொந்தரவு செய்யாதவகையிலும் நாம் செயல்படுவது அவசியம் பற்றி இத்தினம் குறித்து பகிர்ந்துகொள்வதன் மூலம் பயனடையச்செய்வோம்.
- 4தமிழ்மீடியரிற்காக:ஹரிணி