இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர், அந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளிழப்புக்கள் கணக்கிட முடியாதவை. அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சவை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரவும், இழப்புக்கான நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும் 2001ம் ஆண்டிலிருந்துமே 29ம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல் உலகமே உறவுகளாலும், அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மே 29 ம் திகதி உலக தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில், பல சம்பவங்களின் அடிப்படையில் மனித உறவுகளை, குடும்ப உறவுகளை மேம்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பல குடும்பங்களில் கணவன் மனைவி உறவு என்பது கருத்தொருமித்த காதலர்கள் என அமைந்திருக்காது. இருவருக்குமான விருப்புக்களும், இரசனைகளும் வேறுபடும். ஆனாலும் விட்டுக்கொடுத்தலாலும், சகிப்புத் தன்மையாலும், மிகச்சிறந்த குடும்ப வாழ்வு உருவாகிவிடும். துணையிடம் தோற்றுப் போகுதல் என்பது குடும்ப வாழ்விற்கான வெற்றி!.
அமைதி காத்தல் என்பது அடங்கிப் போதல் அன்று. அது ஆழமான புரிதலின் பக்குவம். அதனைப் பழகிக் கொண்டால் உலகத்துக்கும் நன்மை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் உன்னதம் !
அனைத்து அமைதி காப்போருக்கும், அன்பின் தம்பதியர்க்கும் இனிய வாழ்த்துக்கள் !